கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலி- காப்பாற்ற முயன்ற இளம்பெண்ணும் உயிரிழப்பு
- சிறுமி ஜீவஸ்ரீ, பாட்டி உறவு முறையான மலருடன் அதிக பாசத்துடன் பழகி வந்துள்ளார்.
- விளையாடிக்கொண்டிருந்த ஜீவஸ்ரீ தவறி கிணற்றில் விழுந்துள்ளார்.
சிவகிரி:
தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் பல்வேறு கரும்பு தோட்டங்கள் உள்ளது. இந்த தோட்டங்களில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள். கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஆர்.எஸ். மணிநகர் 9-வது தெருவை சேர்ந்த கார்த்திக் மற்றும் 20 குடும்பத்தினர் சிவகிரியில் தங்கியிருந்து கரும்பு தோட்டங்களில் பணியாற்றி வருகிறார்கள்.
நேற்று மதியம் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த கார்த்திக்கின் மகள் ஜீவஸ்ரீ (வயது 4) என்ற சிறுமி திடீரென மாயமானாள்.
அக்கம்பக்கத்தில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. எனவே தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிவகிரி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக்அப்துல்லா தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று முடுக்காளன்கரையில் உள்ள ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் இறங்கி சிறுமியை தேடினர்.
சுமார் 4 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் சிறுமி ஜீவஸ்ரீ மற்றும் மேலும் ஒரு பெண்ணும் பிணமாக மீட்கப்பட்டனர். அப்போது அந்த பெண், சிறுமியை பாதுகாப்பாக கட்டி அணைத்தவாறு இருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
விசாரணையில் அந்த பெண் பண்ருட்டியை சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி மலர் (வயது35) என்பது தெரியவந்தது.
விளையாடிக்கொண்டிருந்த ஜீவஸ்ரீ தவறி கிணற்றில் விழுந்துள்ளார். இதனை பார்த்த அவரது உறவினரான மலர் அவரை மீட்க கிணற்றில் குதித்து உள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாததால் 2 பேரும் தண்ணீர் மூழ்கி இறந்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமி ஜீவஸ்ரீ, பாட்டி உறவு முறையான மலருடன் அதிக பாசத்துடன் பழகி வந்துள்ளார். இதனால் தான் சிறுமி கிணற்றில் விழுந்ததும் தனக்கு நீச்சல் தெரியாது என்ற போதிலும் கூடகிணற்றில் குதித்து காப்பாற்ற முயன்றுள்ளார்.
இருவரது உடலையும் போலீசார் மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.