தமிழ்நாடு

கோத்தகிரியில் தேயிலையை சாலையோரம் கொட்டும் விவசாயிகள்

தொழிற்சாலைகள் கொள்முதல் செய்யாததால் தேயிலையை சாலையோரம் கொட்டும் விவசாயிகள்

Update: 2022-06-25 03:22 GMT
  • தேயிலை செடிகளில் கொழுந்துகள் துளிர்விட்டு உள்ளன. மேலும் தொடர் மழையால் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது.
  • பச்சை தேயிலை பறிக்க போதுமான தொழிலாளர்கள் கிடைக்காததால், தேயிலை அறுவடை செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. சிறு, குறு தேயிலை விவசாயிகள் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அவர்கள் தோட்டங்களில் பச்சை தேயிலை பறித்து தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்கின்றனர்.

மலை பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தேயிலை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

தற்போது தேயிலை செடிகளில் கொழுந்துகள் துளிர்விட்டு உள்ளன. மேலும் தொடர் மழையால் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது.

மேலும் பச்சை தேயிலை பறிக்க போதுமான தொழிலாளர்கள் கிடைக்காததால், தேயிலை அறுவடை செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் தேயிலை கரட்டு இலையாக மாறிவிடுகிறது.

இந்த நிலையில் தேயிலை தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே தேயிலை கொள்முதல் செய்யப்படுகிறது. சில தொழிற்சாலைகள் தேயிலை கொள்முதலை நிறுத்தி விட்டது. இதனால் விவசாயிகள் தேயிலை வினியோகிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அறுவடை செய்த தேயிலையை சாலையோரம், தோட்டங்களில் கொட்டி வருகின்றனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, தொழிற்சாலைகள் பச்சை தேயிலையை கொள்முதல் செய்யாததால் பறித்த தேயிலை வீணாக கொட்டி வருகிறோம். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Similar News