தமிழ்நாடு

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதை கண்டித்து விவசாயிகள்- விசிக ஆர்ப்பாட்டம்

Published On 2024-05-27 08:57 GMT   |   Update On 2024-05-27 08:57 GMT
  • தடுப்பணை கட்டும் பணியை தடுத்து நிறுத்த கோரி தமிழக விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
  • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் கேரள அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு, சிலந்தி ஆறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் சிறு சிறு ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் நீர் வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.

இந்தநிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகாவில் உள்ள வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பெருகுடா பகுதியில் அமராவதி அணையின் பிரதான நீர்வரத்தான சிலந்தி ஆற்றை தடுத்து கேரளா அரசு தடுப்பணை கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து தடுக்கப்படுவதுடன், அணையை ஆதாரமாக கொண்ட பாசன நிலங்கள் பாலைவனமாகும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

எனவே தடுப்பணை கட்டும் பணியை தடுத்து நிறுத்த கோரி தமிழக விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். நேற்று திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா அமராவதி அருகே தமிழக-கேரள எல்லை அருகே சின்னாறு சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் 6 பெண்கள் உட்பட 130 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து தாராபுரம் அண்ணாசிலை முன்பு இன்று விவசாயிகள்- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஓவியர் மின்னல் தலைமை தாங்கினார். விவசாயிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் கேரள அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய பாதுகாப்பு இயக்கத்தின் மாநில துணை செயலாளர் வேலு சிவகுமார் கூறியதாவது:-

அமராவதி அணைக்கு வந்து சேர வேண்டிய தண்ணீரை கேரள அரசு தடுத்து அணை கட்டி வருவது உண்மைதான். எனது தலைமையில் விவசாயிகள் அடங்கிய குழு நேரில் ஆய்வு செய்து அதனை உறுதி செய்துள்ளோம். குடிநீர் தேவைக்கு என்ற காரணத்தை கூறி அங்கு அணை கட்டப்படுகிறது. ஆனால் உண்மை நிலை அதற்கு மாறாக உள்ளது.

தடுப்பணையின் அருகிலேயே மிகப்பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலை உள்ளது. அந்த ஆலையின் தேவைக்காக அமராவதிக்கு வரும் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இந்த தடுப்பணையை தாண்டி ஒரு சொட்டுநீர் கூட அமராவதி அணைக்கு வராது. இது போன்ற கேரளாவின் செயல்பாடுகளால் அமராவதி அணை விரைவில் பாலைவன மாவதையும் தமிழக அரசால் தடுக்க முடியாது. கேரளத்தின் இந்த செயலை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம் என்றார்.

Tags:    

Similar News