தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- வேட்பாளரை அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம்

Published On 2023-02-01 11:59 GMT   |   Update On 2023-02-01 11:59 GMT
  • செந்தில் முருகனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக ஓபிஎஸ் கூறினார்.
  • இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு நான் காரணமாக இருக்கமாட்டேன் என்றார்.

சென்னை:

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல், அதிமுகவின் உட்கட்சி மோதலை தீவிரமாக்கியதுடன் அதற்கு தீர்வு காணும் களமாகவும் மாறியிருக்கிறது. கூட்டணி கட்சியான பாஜகவின் ஆதரவை வேண்டி ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நேரில் சந்தித்தனர். ஆனால் பாஜக இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை.

அதிமுக என கூறிக்கொண்டு இரு தரப்பினரும் வேட்பாளர்களை களமிறக்க முடிவு செய்ததால் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சின்னம் முடக்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ். தென்னரசு போட்டியிடுவார் என்று இன்று காலை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன்மூலம், ஈரோடு கிழக்கில் சின்னம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் போட்டியிடுவதை எடப்பாடி உறுதி செய்திருக்கிறார்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்று வேட்பாளரை அறிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் கட்சியின் தொண்டர் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று அறிவித்த அவர், செந்தில் முருகனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறினார். அதேசமயம் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் தனது வேட்பாளரை திரும்ப பெறுவதாகவும் கூறியிருக்கிறார்.

அதிமுகவின் சின்னம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு நான் காரணமாக இருக்கமாட்டேன் என்றார். சின்னம் முடங்கினால் தனி சின்னத்தில் எங்கள் வேட்பாளர் போட்டியிடுவார் என்றும் கூறினார்.

Tags:    

Similar News