தமிழ்நாடு
மணல் குவாரியில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை செய்தபோது எடுத்த படம்.

தஞ்சையில் 2 மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

Published On 2023-10-12 07:28 GMT   |   Update On 2023-10-12 07:28 GMT
  • மணல் குவாரியின் ஆழம், அகலம் உள்ளிட்டவற்றை அளவீடு செய்தனர்.
  • மணல் குவாரியில் மணல் அள்ளப்பட்ட இடங்கள், ஊழியர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

தஞ்சாவூர்:

காவிரி, கொள்ளிடத்திலுள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவைவிட அதிகளவில் மணல் அள்ளப்பட்டதா? முறைகேடுகள் நடந்துள்ளதா? என்ற அடிப்படையில் மணல் குவாரிகள், குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் கடந்த ஒரு மாதமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே மருவூர் கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை சோதனை மேற்கொள்ள இருந்தனர். ஆனால் அந்த நேரத்தில் பலத்த காற்று வீச தொடங்கியதால், டிரோனை பறக்கவிட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், சோதனை நடவடிக்கையை அலுவலர்கள் ரத்து செய்து திரும்பினர்.

இந்த நிலையில் இன்று திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சென்னம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை அலுவலர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மணல் குவாரியின் ஆழம், அகலம் உள்ளிட்டவற்றை அளவீடு செய்தனர். இவற்றை டிரோன் கேமரா மூலம் பதிவு செய்து வருகின்றனர்.

இதேபோல் நேற்று சோதனை நடத்த முடியாமல் போன மருவூர் கொள்ளிடம் ஆற்றில் இன்று மதியம் அமலாக்கத்துறை அலுவலர்கள் 10-க்கும் மேற்பட்டோர் வந்தனர். பின்னர் அவர்கள் குவாரியில் சோதனை நடத்தி வருகின்றனர்.

மணல் குவாரியில் மணல் அள்ளப்பட்ட இடங்கள், ஊழியர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து 2 மணல் குவாரிகளிலும் சோதனை நடந்து வருகிறது. இவர்களுக்கு மத்திய காவல் படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

Tags:    

Similar News