தமிழ்நாடு

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 20 கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய போதை ஆசாமிகள்

Published On 2022-11-26 09:15 GMT   |   Update On 2022-11-26 09:15 GMT
  • ஜி.என்.செட்டி ரோட்டை ஒட்டியுள்ள சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை இருவரும் அடித்து நொறுக்கினர்.
  • இருவரும் சேர்ந்து 20 கார்கள் மற்றும் 5 மோட்டார் சைக்கிள்களை அடித்து உடைத்திருப்பதாக புகார்கள் வந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

சென்னை:

சென்னை தி.நகர் தியாகராய சாலை பகுதியில் தேனாம்பேட்டை போக்குவரத்து போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் போதையில் கார், மோட்டார் சைக்கிள்களை ஓட்டுகிறார்களா? என்பது பற்றி ஆய்வு செய்து அபராதம் விதித்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போதையில் வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவருக்கும் போக்குவரத்து போலீசார் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் போதை தெளிந்த பிறகு காலையில் வந்து மோட்டார் சைக்கிளை வாங்கி செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இருவரும் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு நடந்து சென்றனர்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இருவரும் அத்துமீறி நடந்து கொண்டனர். ஜி.என்.செட்டி ரோட்டை ஒட்டியுள்ள சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை இருவரும் அடித்து நொறுக்கினர்.

ரோட்டில் கிடந்த கற்கள் மற்றும் கட்டைகளை எடுத்து ஆவேசமாக கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். போதை தலைக்கேறிய நிலையில் 20-க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகளை இருவரும் அடித்து நொறுக்கினார்கள். காலையில் தங்களது கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பாண்டிபஜார் போலீசில் அவர்கள் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி போதை ஆசாமிகளை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

போதை ஆசாமிகளில் ஒருவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவை சேர்ந்த ராகுல் வளவன் என்பதும் அவர் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.

அங்கிருந்து தப்பிய அவர் தி.நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரிய வந்துள்ளது ராகுல் வளவனுடன் வந்த நபர் தர்மின்ராஜ் என்பதும் இவர் மலேசியாவில் பணி செய்துவிட்டு தற்போது சென்னைக்கு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இருவரும் சேர்ந்து 20 கார்கள் மற்றும் 5 மோட்டார் சைக்கிள்களை அடித்து உடைத்திருப்பதாக புகார்கள் வந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் பல கார்களை அவர்கள் சேதப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News