தமிழ்நாடு

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு: மேலாளர் கைது

Published On 2024-01-25 05:55 GMT   |   Update On 2024-01-25 05:55 GMT
  • இன்று காலை சிகிச்சை பலனின்றி சரவணக்குமார் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார்.
  • பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள வச்சகாரப்பட்டி காமராஜர் புரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஆர்.ஆர். நகர் பகுதியில் உள்ளது. நேற்று காலை ஆலையில் உள்ள ஒரு அறையில் ஊழியர்கள் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்து கலவையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 4 அறைகள் தரைமட்டமானது. கன்னி சேரி புதூரை சேர்ந்த காளிராஜ் (வயது 20), முதலிபட்டியைச் சேர்ந்த வீரக்குமார் (50) ஆகிய 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இனாம் ரெட்டிய பட்டியை சேர்ந்த சுந்தர மூர்த்தி (18), தம்ம நாயக்கன் பட்டியை சேர்ந்த சரவண குமார் (25) ஆகியோர் தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு ஆபத்தான நிலையில் 2 பேரும் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சரவணக்குமார் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

வெடி விபத்து தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் முருகேசன், குத்தகைதாரர் முத்துக்குமார், மேலாளர் கருப்பசாமி(50) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் கருப்ப சாமி கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News