தமிழ்நாடு

இலங்கையில் இருந்து வந்த அகதிகளை காணலாம்

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக 2 குழந்தைகளுடன் வந்த தம்பதி

Published On 2022-10-25 05:36 GMT   |   Update On 2022-10-25 05:36 GMT
  • படகில் அகதிகளை அழைத்து வந்தவர்கள் ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே உள்ள கோதண்டராமர் கோவில் கடற்கரையில் அவர்களை இறக்கிவிட்டு திரும்பி சென்று விட்டனர்.
  • இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து வெளியேறி அகதிகளாக தமிழகத்திற்கு வந்ததாக ஜனார்த்தன் மற்றும் அவரது மனைவி தெரிவித்தனர்.

ராமேசுவரம்:

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் அங்கு வாழ வழியில்லாமல் தவித்து வரும் அப்பாவி மக்கள் அங்கிருந்து தஞ்சம் தேடி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திற்கு அகதிகளாக வருவது தொடர்கிறது.

இந்த நிலையில் இலங்கை திருகோணமலை திருக்கடலூர் கோவிந்தன் வீதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஜனார்த்தன்(வயது 29), தனது மனைவி பிரவீனா (26), மகன்கள் சுதர்சன் (9), சுதிசன் (5) ஆகியோருடன் தமிழகத்திற்கு அகதியாக வர புறப்பட்டனர்.

அவர்கள் இலங்கை மன்னார் மாவட்டம் கள்ளப்பாடு என்ற இடத்தில் இருந்து படகுக்கு ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தி நேற்று முன் தினம் இரவு ராமேசுவரம் வந்தனர். இந்த படகில் அகதிகளை அழைத்து வந்தவர்கள் ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே உள்ள கோதண்டராமர் கோவில் கடற்கரையில் அவர்களை இறக்கிவிட்டு திரும்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து அந்தப்பகுதியில் மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள் மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பெயரில் அங்கு போலீசார் விரைந்து சென்று, அகதிகளாக வந்தவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

பின்பு அவர்களை மண்டபத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து வெளியேறி அகதிகளாக தமிழகத்திற்கு வந்ததாக ஜனார்த்தன் மற்றும் அவரது மனைவி தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்களை மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

Tags:    

Similar News