தமிழ்நாடு

சென்னை புத்தகக்காட்சி இன்றுடன் நிறைவு... கடைசி நாள் என்பதால் கூடுதல் தள்ளுபடி

Published On 2024-01-21 04:26 GMT   |   Update On 2024-01-21 04:26 GMT
  • சென்னை புத்தகக்காட்சி கடந்த 3-ந்தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கியது.
  • சில பதிப்பகங்கள் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தொகுப்பை 50 சதவீதம் தள்ளுபடிக்கு விற்பனை செய்தன.

சென்னை:

சென்னையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடத்தப்படும் புத்தகக்காட்சி மிகவும் புகழ் பெற்றது. இதை தமிழகத்தின் புத்தக திருவிழா என்று சொல்வார்கள்.

சென்னை மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வாசகர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் இந்த காட்சிக்கு வந்து பயன் பெறுவது உண்டு.

இந்த ஆண்டுக்கான சென்னை புத்தகக்காட்சி கடந்த 3-ந்தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொடங்கியது. தொடக்கத்திலேயே மழையால் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டன. புத்தகக்காட்சிக்கு ஒருநாள் விடுமுறை நிலை ஏற்பட்டது.

அதன் பிறகு மழை இல்லாததால் தொடர்ந்து மிக சிறப்பாக புத்தகக்காட்சி நடைபெற்றது. லட்சக்கணக்கான வாசகர்கள் புத்தகக்காட்சிக்கு வந்து ஏராளமான புத்தகங்களை வாங்கி சென்றனர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதுபோல இந்த ஆண்டும் புத்தகக் காட்சி சமயத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் புதிதாக வெளியானது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக நாவல்கள், கதைகள்தான் முன்பெல்லாம் அதிகமாக விற்பனையாகும். ஆனால் இந்த ஆண்டு கட்டுரை நூல்கள், சிறுவர் இலக்கிய புத்தகங்கள் அதிகளவு விற்பனையாகி உள்ளன.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு புத்தகக்காட்சி இரவு புத்தகக்காட்சி நிறைவு பெறுகிறது. அதன் பிறகுதான் எத்தனை கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன என்பது தெரியவரும்.

கடைசி நாள் என்பதால் பதிப்பகங்கள் தங்களது படைப்புகளை முடிந்தவரை விற்பனை செய்ய வேண்டும் என்ற இலக்குடன் கூடுதல் சலுகைகளை அறிவித்துள்ளன. பெரும்பாலான பதிப்பக உரிமையாளர்கள் கூடுதல் தள்ளுபடி விலைக்கு புத்தகங்களை இன்று விற்பனை செய்தனர்.

நேற்று முதல் குறைந்த விலைக்கு அதிக புத்தகங்கள் கிடைத்ததால் வாசகர்கள், எழுத்தாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சில பதிப்பகங்களில் நாவல்கள் 100 ரூபாய் என்ற அளவுக்கு விற்பனை செய்யப்பட்டன. ஆங்கில நாவல் விற்பனை செய்யப்படும் இடங்களில் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது.

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு வெளியிலும் சாலையோரத்திலும் ஏராளமானவர்கள் பழைய புத்தகங்கள் விற்பனை செய்தனர். அந்த புத்தகங்களை வாங்கவும் வாசகர்கள் அதிகளவு ஆர்வம் காட்டினார்கள்.

4 நாவல்கள் ரூ.250 என்று கடந்த வாரம் விற்பனையானது. இன்று 4 நாவல்கள் 100 ரூபாய்க்கும் கீழ் வழங்கப்பட்டது. சில பதிப்பகங்கள் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தொகுப்பை 50 சதவீதம் தள்ளுபடிக்கு விற்பனை செய்தன.

நேற்றும் இன்றும் மாணவர்கள் வருகை அதிகளவு காணப்பட்டது. இன்று கடைசி நாள் என்பதால் காலை முதலே கூட்டம் சற்று அதிகமாக காணப்படுகிறது.

புத்தகக் காட்சி வளாகத்தில் உணவு கூடங்கள், இலக்கிய நிகழ்ச்சி அரங்குகள் இருந்தாலும் முதியவர்களுக்கு ஓய்வு எடுக்க சரியான வசதி செய்யப்படவில்லை. அரங்குகளுக்கு செல்லும்போது தள அமைப்பு பல இடங்களில் தடுமாற வைத்தது. அதுபோல கழிவறை பிரச்சனையும் காணப்பட்டது.

இந்த குறைகளும் இல்லாமல் இருந்து இருந்தால் புத்தகக்காட்சி இனிய அனுபவமாக வாசகர்களுக்கு இருந்து இருக்கும்.

Tags:    

Similar News