தமிழ்நாடு

பள்ளி மாணவியை கடத்தி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்: கட்டிட மேஸ்திரி கைது

Published On 2023-10-13 05:30 GMT   |   Update On 2023-10-13 05:30 GMT
  • மாணவியின் தாயார் ரேவதி பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
  • மாணவி தான் கடத்தப்படுகிறோம் என்று அறியாமல் ராமசாமியுடன் சென்று இருக்கிறார்.

பீளமேடு:

கோவை பீளமேடு கிரி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சேகர். சூலூர் அரசூரில் உள்ள கிரைண்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (43). கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவர்களது மகள் பயோனியர் மில் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 11-ந் தேதி சேகர் பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளரின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் பேசினார். உங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சேகரின் மகளை நான் கடத்தி வைத்துள்ளேன். ரூ.5 லட்சம் பணம் கொடுத்தால் குழந்தையை விட்டு விடுகிறேன் என தெரிவித்தார். மேலும் அந்த மாணவியிடமும் செல்போனை கொடுத்து மர்ம நபர் பேச செய்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர், சேகரை அழைத்து விவரத்தை தெரிவித்தார். சேகர் வீட்டுக்கு தொடர்பு கொண்டு மகளை பற்றி விசாரித்தார். மாணவி பள்ளி முடிந்து வீட்டு வராதது தெரியவந்தது. இதனால் மாணவி கடத்தப்பட்ட விவரம் உறுதியானது.

இதுபற்றி மாணவியின் தாயார் ரேவதி பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் மர்ம நபர் மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை கொண்டு விசாரித்தனர்.

அப்போது மாணவியை கடத்திய நபர் பஸ்சில் சூலூர் பாப்பம்பட்டியை கடந்து பஸ்சில் செல்வது தெரியவந்தது. இறுதியில் திண்டுக்கல்லில் அவர் மாணவியுடன் இறங்கிய விவரமும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் திண்டுக்கல்லுக்கு விரைந்து சென்று கடத்தப்பட்ட மாணவியை மீட்டனர். மேலும் அவரை கடத்திய நபரையும் கைது செய்தனர்.

விசாரணையில் அந்த நபர் வெள்ளலூர் முல்லை நகரைச் சேர்ந்த ராமசாமி (வயது 52) என்பது தெரியவந்தது. இவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். இவரிடம் தான் மாணவியின் தாயார் ரேவதி கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பழி வாங்கும் எண்ணத்துடன் ராமசாமி, ரேவதியின் மகளை கடத்தி இருக்கிறார்.

பள்ளி முடிந்து திரும்பிய மாணவியை ராமசாமி சந்தித்துள்ளார். ஏற்கனவே அறிமுகம் ஆன நபர் என்பதால் மாணவியும் அவரிடம் பேசி உள்ளார். உனது தாயாருக்கு உடல் நலம் சரியில்லை, ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளோம், நீ என்னுடன் வா, அழைத்துச் செல்கிறேன் என்று கூறியே மாணவியை அழைத்துச் சென்று இருக்கிறார். ஆனால் மாணவி தான் கடத்தப்படுகிறோம் என்று அறியாமல் ராமசாமியுடன் சென்று இருக்கிறார்.

இருந்தாலும் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டு ராமசாமியை பிடித்து விட்டனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். மாணவி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Tags:    

Similar News