தமிழ்நாடு

இந்தியாவில் 22 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய்: சி.எம்.சி. டாக்டர்கள் எச்சரிக்கை

Published On 2023-10-11 06:21 GMT   |   Update On 2023-10-11 07:12 GMT
  • மார்பக புற்றுநோய் என்பது மரபியல் மற்றும் குடும்ப வரலாறு உள்ளிட்ட பல்வேறு ஆபத்து காரணிகளால் பாதிக்கப்படும் ஒரு சிக்கலான நோயாகும்.
  • தாமதமாக கண்டறிதல் என்பது இந்தியாவில் ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது.

வேலூர்:

வேலூர் சி.எம்.சி. கல்லூரி மருத்துவமனையின் கதிரியக்க புற்றுநோயியல் துறை சார்பில், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் இருந்து கோட்டை வரை பேரணி நடந்தது.

இதில் மார்பக ஆரோக்கியம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் பற்றிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். 

வேலூரில் மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்த காட்சி

ஊர்வலத்திற்கு ரேடியேஷன் ஆர்காலஜி துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் பி.ராஜேஷ் தலைமை தாங்கினார். அப்போது மருத்துவர்கள் கூறியதாவது:-

மார்பக புற்றுநோய் என்பது மரபியல் மற்றும் குடும்ப வரலாறு உள்ளிட்ட பல்வேறு ஆபத்து காரணிகளால் பாதிக்கப்படும் ஒரு சிக்கலான நோயாகும்.

உணவுமுறை, உடல் செயல்பாடு மற்றும் மது அருந்துதல் போன்ற வாழ்க்கை முறை காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மேலும், தாமதமாக கண்டறிதல் என்பது இந்தியாவில் ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது, பெரும்பாலும் விழிப்புணர்வு இல்லாமை மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுவதில் தயக்கம் போன்றவை பெரும் பிரச்சினையாக உள்ளது.

இந்தியாவில் பெண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோயாக மார்பக புற்றுநோய் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இதன் ஆபத்து அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையில் மார்பக புற்றுநோய் சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 2020-ம் ஆண்டில் சுமார் 1.7 லட்சம் பேருக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டு ஆய்வில் 22 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது மிகவும் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கை மற்றும் சுகாதார நெருக்கடியை குறிக்கிறது. மேலும் சமூக, சுகாதார நிபுணர்களின் நடவடிக்கைக்கான தேவையை வெளிப்படுத்துகிறது.

நோயின் அறிகுறிகளை தொடக்க காலத்திலேயே கண்டறியும்போது, வெற்றிகரமான சிகிச்சை மற்றும் நீண்ட காலம் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சி.எம்.சி ஊழியர்கள் மற்றும் மார்பக புற்றுநோய் மேலாண்மை குழுவின் சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News