தமிழ்நாடு

ஏற்காடு ஏரியில் படகு சவாரி- சுற்றுலா பயணிகளை கவர்ந்த நவீன மிதி வண்டி படகு

Published On 2023-07-08 07:18 GMT   |   Update On 2023-07-08 07:18 GMT
  • பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலா வரும் பயணிகள், ஏரியில் படகு சவாரி செய்யாமல் செல்வதில்லை.
  • தேன் நிலவு கொண்டாண்டத்திற்காக வரும் புதுமணத்தம்பதிகள், காதல் ஜோடிகள், இருவர் மட்டும் வசதியாக அமர்ந்து செல்லக்கூடிய வகையில் இந்த மிதிபடகு வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ஏற்காடு:

சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஏற்காட்டிற்குள் நுழைந்ததும், சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக பிரமாண்ட ஏரி அமைந்துள்ளது.

பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலா வரும் பயணிகள், ஏரியில் படகு சவாரி செய்யாமல் செல்வதில்லை. குடும்பத்தோடும், ஜோடியாகவும் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, படகு இல்லத்தில் பல்வேறு ரகங்களில் படகுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

10 பேர் அமர்ந்து செல்லக்கூடிய மோட்டார் பொருத்திய விசைப்படகுகள், முழுக்க முழுக்க மனித சக்தியால் இயக்கப்படும் துடுப்பு படகுகள், தாங்களே இயக்கக்கூடிய மிதிபடகுகள், குழந்தைகளை கவரும் விதமாக மிக்கிமவுஸ், அன்னப்பறவை உருவங்களை கொண்ட மிதிபடகு போன்றவற்றில் சுற்றுலா பயணிகள் உல்லாச சவாரி செய்வது வழக்கம்.

தற்போது, புதிய வரவாக நவீன படகு ஒன்று வரவழைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படகு குழாம் அதிகாரிகள் கூறுகையில், முழுக்க முழுக்க மனித சக்தியால் இயங்கக்கூடிய மிதிவண்டி வடிவிலான படகு புதிய வரவாக வந்துள்ளது. தேன் நிலவு கொண்டாண்டத்திற்காக வரும் புதுமணத்தம்பதிகள் மற்றும் காதல் ஜோடிகள், இருவர் மட்டும் வசதியாக அமர்ந்து செல்லக்கூடிய வகையில் இந்த மிதிபடகு வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த படகு வந்த முதல் நாளிலேயே, ஏராளமானோர் சவாரி செய்ய மிகுந்த ஆர்வம் காட்டினர். முழங்கால் வலி ஏற்படாத வகையில், இந்த படகு வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். வயதானவர்கள் கூட சுலபமாக இயக்க முடியும். சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பினை பொறுத்து, கூடுதல் படகுகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

Tags:    

Similar News