தமிழ்நாடு செய்திகள்

வடமாநில தொழிலாளர்களை சந்தித்த பீகார் குழு- மகிழ்ச்சியாக வாழ்வதாக தெரிவித்ததால் திருப்தி

Published On 2023-03-06 13:23 IST   |   Update On 2023-03-06 13:23:00 IST
  • பீகார் குழுவினர் மேட்டுப்பாளையம் பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் அதிகம் வேலை பார்க்க கூடிய தனியார் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
  • தொழிலாளர்கள் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் இங்கு நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகிறோம் என தெரிவித்தனர்.

கோவை:

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ மற்றும் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

இதனால் வடமாநில தொழிலாளர்கள் கூட்டம், கூட்டமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பதாகவும் ஒரு தகவல் பரவியது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இது பீகார் மாநிலத்திலும் எதிரொலிக்கவே, அந்த மாநில அரசு உண்மை நிலையை கண்டறிவதற்காக ஊரக வளர்ச்சி திட்ட செயலளர் பாலமுருகன் தலைமையில் நுண்ணறிவு ஐ.ஜி. கண்ணன், தொழிலாளர் நலத்துறை கமிஷனர் அலோக்குமார், போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் குமார் ஆகியோர் அடங்கிய 4 பேர் கொண்ட குழுவை தமிழகத்திற்கு அனுப்பியது.

அந்த குழுவினர் நேற்றுமுன்தினம் சென்னை வந்து தமிழக தொழிலாளர் கமிஷனர் அதுல் ஆனந்த், டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து நேற்று அவர்கள் திருப்பூர் மாவட்டத்திற்கு வந்தனர்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வினீத் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

பின்னர் திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் வேலைபார்க்கும் 3 நிறுவனங்களுக்கு நேரில் சென்று அவர்களை சந்தித்து குறைகளை கேட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு எந்தவித குறையும் இல்லை. சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்தனர்.

பீகார் குழுவினர் திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வை முடித்து கொண்டு நேற்றிரவு கோவைக்கு வந்தனர்.

கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினர்.

இன்று காலை பீகார் மாநில ஊரக வளர்ச்சி திட்ட செயலாளர் பாலமுருகன், நுண்ணறிவு ஐ.ஜி. கண்ணன், தொழிலாளர் நலத்துறை கமிஷனர் அலோக்குமார், போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் கோவை மாவட்டம் அன்னூர், மேட்டுப்பாளையம் பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் அதிகம் வேலை பார்க்க கூடிய தனியார் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து பேசினர்.

அப்போது அவர்களிடம் உங்களுக்கு இங்கு பாதுகாப்பு எப்படி உள்ளது? ஏதாவது குறைகள் உள்ளதா? அச்சுறுத்தல் ஏதாவது இருக்கிறதா? யாராவது உங்களுக்கு எந்தவிதத்திலாவது பிரச்சினை கொடுக்கின்றனரா? என்ப து குறித்தும் கேட்டனர்.

அதற்கு தொழிலாளர்கள் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் இங்கு நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகிறோம் என தெரிவித்தனர்.

வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து பேசிய குழுவினர் பின்னர் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை கலெக்டர் கிராந்திகுமார் பாடி வரவேற்றார்.

பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் பீகார் மாநில குழு பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், தொழில் அமைப்பினர் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற பீகார் மாநில குழுவினரிடம், கோவை மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்புகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் வடமாநில தொழிலாளர்களுக்கு கடந்த சில நாட்களாக போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்ததும் குறித்து மாவட்ட நிர்வாகத்தினர் விரிவாக விளக்கி கூறினர். இதை அனைத்தையும் கேட்டு கொண்ட பீகார் மாநில குழுவினர் வடமாநில தொழிலாளர்களுக்கு இன்னும் கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டு கொண்டது.

Tags:    

Similar News