தமிழ்நாடு

350 முதலைகள் இதுவரை குஜராத் கொண்டு செல்லப்பட்டன- ஐகோர்ட்டில் தகவல்

Update: 2022-06-28 08:46 GMT
  • சென்னை முதலை பண்ணையில் இன்னும் 650 முதலைகள் இடமாற்றம் செய்யப்பட இருக்கிறது.
  • முதலைகளை இடமாற்றம் செய்ய மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் உரிய அனுமதி வழங்கி உள்ளது

சென்னை:

சென்னையை அடுத்த வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முதலை பண்ணையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா கட்டுப்பாடு, ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த முதலை பண்ணை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. பார்வையாளர்கள் வரத்து குறைந்ததால் வருமானம் இன்றி முதலைகளை பராமரிக்க முடியாமலும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமலும் நிர்வாகத்தினர் தவித்தனர்.

இதையடுத்து முதலை பண்ணை நிர்வாகத்தினர், பண்ணையில் உள்ள முதலைகளை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்துக்கு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் தமிழ்நாடு வனவிலங்கு காப்பகத்துக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடிதம் அனுப்பியது.

இதைத்தொடர்ந்து நன்னீர் முதலைகள், சதுப்பு நில முதலைகள் என பல்வேறு வகைகளை சேர்ந்த 350 ஆண் முதலைகள், 650 பெண் முதலைகள் என மொத்தம் 1,000 முதலைகளை இடமாற்றம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

அவற்றை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள தனியார் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த சில மாதங்களாக முதலை பண்ணையில் இருந்து முதலைகளை பாதுகாப்பாக மரப்பெட்டியில் அடைத்து குஜராத் மாநிலத்துக்கு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே விஸ்வநாதன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனுதாக்கல் செய்தார்.அதில் குஜராத்தில் உள்ள பூங்காவில் 56 முதலைகளை பராமரிக்கும் வகையில் மட்டுமே இடவசதி உள்ளது. சென்னையில் இருந்து முதலைகளை இடமாற்றம் செய்ய வழங்கப்பட்ட அனுமதியில் விதிமீறல் உள்ளது.

இதுபற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் முதலைகள் இடமாற்றத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டரி தலைமையிலான அமர்பு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது குஜராத்தை சேர்ந்த விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் சார்பில் கூறும்போது, சென்னை முதலை பண்ணையில் இருந்து 350 முதலைகள் ஏற்கனவே குஜராத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. இன்னும் 650 முதலைகள் இடமாற்றம் செய்யப்பட இருக்கிறது.

முதலைகளை இடமாற்றம் செய்ய மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் உரிய அனுமதி வழங்கி உள்ளது. இதில் எந்தவித சட்ட விதிமீறலும் இல்லை என்று தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News