தமிழ்நாடு

ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை: 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

Published On 2023-10-20 07:32 GMT   |   Update On 2023-10-20 07:32 GMT
  • ஆட்டோ சவாரியை முடித்துவிட்டு வீடு திரும்பிய சங்கு கண்ணன் சாப்பிட்ட பின்னர் வீட்டு முன்பு அமர்ந்திருந்தார்.
  • கொலை குறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

மதுரை:

மதுரை மாவட்டம் சிலை மான் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி என்பவரது மகன் சங்கு கண்ணன் (வயது 27). அதே பகுதியில் ஆட்டோ டிரைவாக வேலை பார்த்து வந்தார். இன்னும் திருமணமாகாத சங்கு கண்ணன் தனது பெற்றோருடன் சிலைமான் சங்கையா கோவில் தெருவில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று இரவு ஆட்டோ சவாரியை முடித்துவிட்டு வீடு திரும்பிய சங்கு கண்ணன் சாப்பிட்ட பின்னர் வீட்டு முன்பு அமர்ந்திருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் வந்தனர்.

அவர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் தங்களது உடலில் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சங்கு கண்ணனை நோக்கி வந்தனர். உடனே அவர் தன்னை காப்பாற்றிக்கொள்ள வீட்டிற்குள் ஓட முயன்றார்.

ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சங்கு கண்ணனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதற்கிடையே சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து அவரது பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.

உடனே மர்ம நபர்கள் வாகனங்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சங்கு கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை குறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான மூன்று நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழில் போட்டியில் சங்கு கண்ணன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் சிலைமான் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News