தமிழ்நாடு

2,532-வது ஆண்டு ஆதிசங்கரர் ஜெயந்தி விழா நாடு முழுவதும் கொண்டாட்டம்- காஞ்சி சங்கர மடம் ஏற்பாடு

Published On 2023-04-25 08:30 GMT   |   Update On 2023-04-25 08:30 GMT
  • காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆதிசங்கரர் சன்னதியில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
  • திருப்பதி, காலடி, காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நாடு முழுவதும் ஆதிசங்கரருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம்:

அத்வைத தத்துவத்தை உலகத்திற்கு நிலைநாட்டியவர் ஆதிசங்கரர். இவரது 2532-வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பே ஆதிசங்கரர் ஜெயந்தி விழா தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது.

திருப்பதியில் உள்ள விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆதிசங்கரர் சிலைக்கு சிறப்பு வழிபாடு நடத்தினார்.

இதேபோல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடுமுழுவதும் சங்கரர் ஜெயந்தி விழாவை கொண்டாட காஞ்சி சங்கரமடம் ஏற்பாடு செய்துள்ளது. ஆதி சங்கரரின் சத்தியம், ஒருமைப்பாடு மற்றும் மத நல்லிணக்கத்தை பரப்புவதே இதன் நோக்கம் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

காஞ்சசிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆதிசங்கரர் சன்னதியில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள ஐம்பொன்னால் ஆன ஆதிசங்கரர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. அதேபோல் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள ஆதிசங்கரர் சன்னதியில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் சார்பில் திருப்பதி, காலடி, காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நாடு முழுவதும் ஆதிசங்கரருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது.

இன்று மாலை நடை பெறும் நிகழ்ச்சியில் காஞ்சி பாடசாலையில் 4 வேதங்கள் கற்ற 175 மாணவர்களுக்கு சான்றிதழ்களை சங்கராச் சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்குகிறார்.

இதுகுறித்து சங்கர மடத்தை சேர்ந்த ஒருவர் கூறும்போது, 'ஆதிசங்கரரின் 2532-வது ஆண்டு ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த வேதபண்டிதர்கள், ஸ்ரீநகரில் உள்ள சங்கராச்சாரியா மலையிலும், புனேயை சேர்ந்தவர்கள் நேபாளத்திலும், தமிழகத்தை சேர்ந்தவர்கள் அமிர்தசரஸ் மற்றும் சண்டிகரிலும், புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள் சிக்கிமிலும் கூடி உள்ளனர். ஆதிசங்கரர் ஒருமைப்பாட்டுக்காக பாடுபட்டார்' என்றனர்.

Tags:    

Similar News