தமிழ்நாடு செய்திகள்
காலாவதியான மாத்திரைகள்.

ஈரோட்டில் ரோட்டோரத்தில் காலாவதியான மருந்து-மாத்திரைகள் கொட்டப்பட்டு இருந்ததால் பரபரப்பு

Published On 2022-04-21 09:39 IST   |   Update On 2022-04-21 09:39:00 IST
ஈரோடு எஸ்.கே.சி. ரோடு இ.சி.எம். லே-அவுட் பகுதியில் ரோட்டோரம் கொட்டப்பட்டுள்ள காலாவதியான மருந்து மாத்திரைகளை மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் கண்ணன் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
ஈரோடு:

ஈரோடு எஸ்.கே.சி.ரோடு, இ.சி.எம். லே-அவுட் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இன்று காலை மாநகராட்சி சார்பில் துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது ரோட்டோரமாக 2 மூட்டைகளில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் கிடந்தன. இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் எப்போதும் குறைவாகவே இருக்கும். இதனை பயன்படுத்தி யாரோ சிலர் காலாவதியான மருந்து, மாத்திரை மூட்டைகளை இங்கு ரோட்டோரமாக கொட்டி சென்று உள்ளனர்.

இது குறித்து துப்புரவு ஆய்வாளர் கண்ணன், மாநகராட்சி அதிகாரிகள், 34-வது வார்டு கவுன்சிலர் ரேவதி திருநாவுக்கரசு ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

அந்த மூட்டைகளில் ரத்தக்கொதிப்பு மாத்திரைகள், மருந்துகள், கருத்தரிக்காமல் இருக்க கூடிய மாத்திரைகள் அதிக அளவில் இருந்தன. இது யார் கொண்டு வந்து கொட்டியது என தெரியவில்லை. இ.சி.எம். லே-அவுட் பகுதியை சுற்றி ஏராளமான மொத்த மருந்து விற்பனை நிலையங்கள் உள்ளன.

இதில் யாராவது கொண்டு வந்து போட்டார்களா? என மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த காலாவதியான மருந்துகளை கொட்டிய நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நிறுவனங்கள் சீல் வைத்து, அதன் உரிமம் ரத்து செய்யப்படும்.

மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இன்று காலை இந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. 

Similar News