தமிழ்நாடு
வெரிட்

காலாவதியான விசாவுடன் சுற்றிய அமெரிக்க சுற்றுலா பயணி- போலீசார் விசாரணை

Published On 2022-04-20 06:56 GMT   |   Update On 2022-04-20 06:56 GMT
நெல்லை அருகே காலாவதியான விசாவுடன் சுற்றிய அமெரிக்க சுற்றுலா பயணி சுற்றுலா செல்வதற்காக தான் இந்தியா வந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திசையன்விளை:

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரத்தை சேர்ந்தவர் வெரிட். இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 16-ந்தேதி அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்தார்.

இவர் சுற்றுலா விசா மூலமாக தலைநகர் டெல்லிக்கு வந்த நிலையில் அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்து உள்ளார்.

பின்னர் கொரோனா பெரும் தொற்று காரணமாக விமானங்கள் வெளிநாடுகளுக்கு இயக்கப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் அவரால் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்ப முடியவில்லை.

அதன் பின்னர் அவர் காரைக்கால், கோவா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்து வந்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி அவரது விசா முடிவடைந்து விட்டது.

இதனால் அவர் சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார். நேற்று நெல்லை மாவட்டம் உவரி அந்தோணியார் ஆலய வளாகத்தில் அவர் தங்கி இருந்துள்ளார்.

நேற்று இரவு அந்த வழியாக ரோந்து சென்ற உவரி போலீஸ்காரர்கள் சதீஷ் மற்றும் ரொனால்டோ ஆகியோர் அவரை பிடித்து விசாரித்துள்ளனர்.

அப்போது அவர் விசா காலாவதியாகி விட்டது என்று கூறி உள்ளார். மேலும் விசாவை புதுப்பிக்க 3 முறை விண்ணப்பித்தும் அவை ஏற்கப்படவில்லை. எனவே அமெரிக்காவில் உள்ள எனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளேன். தற்போது எனது செலவுக்கு அங்கிருந்து பணம் அனுப்பி வருகின்றனர் என்று கூறி உள்ளார்.

இதையடுத்து அவரை உவரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் சுற்றுலா செல்வதற்காக தான் இந்தியா வந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக வந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News