தமிழ்நாடு செய்திகள்
தர்பூசணி சாகுடி

தாகம் தணிக்கும் தர்பூசணி சாகுடி செய்யும் விவசாயிகளின் ஏக்கம் போக்குமா அரசு?

Published On 2022-04-04 13:57 IST   |   Update On 2022-04-04 13:57:00 IST
கோடையில் பல்வேறு மருத்துவ குணங்களுடன் தாகம் தணிக்கும் தர்ப்பூசணி பழம் சாகுபடி ஓரளவு லாபத்தை தந்தாலும் அதை அறுவடை செய்வதற்குள் பொருளாதார ரீதியாக சிரமங்களை சந்திப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அறந்தாங்கி:

கோடைகாலம் வந்துவிட்டால் தெருவுக்கொரு தர்பூசணிக்கடை முளைத்து விடும். ஒரு கண்ணாடிப் பாத்திரத்துக்குள் தர்பூசணியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து விற்பார்கள். இதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு உண்டு.

தர்பூசணி சாப்பிடுவதற்காகவே கோடைகாலம் எப்போது வரும் என ஏங்குபவர்களும் உண்டு. குறைவான விலையில் நிறைவான பலன் தரும் தர்பூசணியானது, இருதய நலனை காக்கிறது. இதில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தன்மை மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பினை தடுக்கிறது.

புற்றுநோயில் இருந்து காக்கும், கண்களை பாதுகாக்கும், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளும், உயர்ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும், எலும்பைப் பாதுகாக்கும், உடல் எடை மிகாமல் காக்கும், சிறுநீரக செயல்பாட்டை கட்டுக்குள் வைத்திருக்கும் என்பது போன்ற பல்வேறு மருத்துவ குணங்களை இந்த தர்பூசணி கொண்டுள்ளது.

கோடையில் ஏற்படும் எல்லா பிரச்னைகளிலிருந்தும் நம்மைக் காக்கிறது இந்த தர்பூசணி. உடல் சூட்டைத் தணித்து, வெப்பம் மிகுந்த இந்தக் காலத்தில் இது நமது உடலை சீராக்க உதவுகிறது.

இவ்வாறு பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ள தர்பூசணி சாகுபடிக்கு அதிக செலவு ஏற்படுவால் அரசே கடனுதவி வழங்கி பழங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள நாட்டுமங்கலம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் சீசனுக்கு தகுந்தவாறு பழங்கள் சாகுபடியை தொடங்கி விடுகிறார்கள். அந்த வகையில், தற்போது தர்பூசணி பழம் சாகுபடி செய்து வருகின்றனர்.

கோடை காலம் வந்தாலே கிராமங்கள் முதல் நகரங்கள் வரை தர்பூசணி பழங்களுக்கு தனி மவுசுதான். யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது போல கோடை தொடங்கும் முன்னரே நகர பகுதிகளில் ஆங்காங்கே தர்பூசணி பழ குவியல்களை பார்க்கலாம்.

குறைந்த விலையில் கிடைப்பதுடன் தாகத்தை தணிப்பதால் பெரும்பாலான மக்கள் தர்பூசணி பழங்களையே விரும்புகின்றனர். கடந்த 2 ஆண்டாக கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு, பொது போக்குவரத்து தடை போன்ற காரணங்களால் தர்பூசணி பழங்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பேரிழப்புக்கு ஆளாகினர்.

தற்போது கொரோனா தாக்கம் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் நாட்டுமங்கலம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவை அறுவடை செய்யப்பட்டு இப்போது விற்பனைக்காக உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.

தர்ப்பூசணி பழ சாகுபடி ஓரளவு லாபத்தை தந்தாலும் அதை அறுவடை செய்வதற்குள் பொருளாதார ரீதியாக சிரமங்களை சந்திப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாயி குமார் கூறுகையில், 2 ஆண்டாக விலை கிடைக்கவில்லை. நடப்பாண்டும் விளைச்சல் குறைவாக உள்ளது. ஒரு கிலோ ரூ.11 என்ற விலைக்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவாகிறது. ஆனால் ரூ.70 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கும். கரும்பு விவசாயிகளுக்கு அரசு உதவி செய்வதுபோல் வங்கி கடனுதவி இடுபொருட்கள் வழங்கி அரசே கொள்முதல் செய்தால் நல்ல விலை கிடைக்கும். அதன் மூலம் நாங்கள் தொடர்ந்து சாகுபடி செய்வோம் என்றார்.

Similar News