தமிழ்நாடு
யானைக்குட்டியை டிரோன் கேமரா மூலம் வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதை காணலாம்

காயமடைந்த குட்டியானையை டிரோன் கேமரா மூலம் தேடும் பணி தீவிரம்

Published On 2022-01-19 06:32 GMT   |   Update On 2022-01-19 07:02 GMT
கம்பி வேலியில் சிக்கி காயமடைந்த 2 வயது குட்டியானையை டிரோன் கேமரா மூலம் தேடும் பணியில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜவளகிரி வனப்பகுதியில் 6க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு சுற்றி திரிகின்றன.

இந்த யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த 2 வயதான யானைக்குட்டி நேற்று வனப்பகுதியில் ஓரத்தில் உள்ள கம்பி வேலியில் சிக்கியது அதிலிருந்து மீள முயன்ற யானைக்குட்டிக்கு துதிக்கை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை பார்த்த வனத்துறையினர் அதனை மீட்க முயன்றனர் ஆனால் அதற்குள் அங்கு இருந்த குட்டி யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் கார்த்திகாயினி மற்றும் வனசரகர்கள் முருகேசன், சுகுமார், ரவி, வனத்துறை மருத்துவர் பிரகாஷ் உள்ளிட்டோர் ஜவளகிரி வனப்பகுதிக்கு சென்று யானை குட்டியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வனப்பகுதிக்குள் சென்று யானை குட்டியை தேடி வருகின்றனர். ஜவளகிரி வனப்பகுதி அடர்த்தியாக இருப்பதால் தேடும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது.

இதனால் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று டிரோன் கேமரா அனுப்பி குட்டி யானையை எங்குள்ளது என்பதை தீவிரமாக தேடி வருகின்றனர்.

துதிக்கையில் பலத்த காயத்துடன் சுற்றித் திரியும் யானை குட்டியை 2-ம் நாளான இன்று காலையில் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜவளகிரி வனப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக உள்ளதால் இந்த யானை குட்டியை தேடும் பணி வனத்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.

இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது, ‘படுகாயம் அடைந்த குட்டி யானையை இன்று அல்லது நாளைக்குள் கண்டுபிடித்து விடுவோம். பின்னர் அதற்கு சிகிச்சை அளித்து மீண்டும் அதன் கூட்டத்தோடு சேர்க்கப்படும். ஆனால் குட்டியானை இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு இருப்பதால் தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது’ என்றனர்.


Tags:    

Similar News