தமிழ்நாடு
ஊட்டி நகராட்சி பகுதியில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதி

குன்னூரில் ஓட்டல் ஊழியர்கள் 28 பேருக்கு கொரோனா

Update: 2022-01-17 04:34 GMT
குன்னூர்- கோத்தகிரி சாலையில் உள்ள ஓட்டலில் மேலாளர் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள், பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குன்னூர்:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

நேற்று மாவட்டத்தில் புதிதாக மேலும் 244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 36,026 ஆக உயர்ந்துள்ளது.

44 பேர் குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,481 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 220 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவ மனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் 1,325 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்று அதிகரித்து வந்தாலும் சுற்றுலா தொழில் பாதிக்காமல் இருக்க, விதிமுறைகளை பின்பற்றி ஓட்டல்கள், லாட்ஜ்களில் சுற்றுலா பயணிகள் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் குன்னூர்- கோத்தகிரி சாலையில் உள்ள ஓட்டலில் மேலாளர் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள், பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அங்கு வேலை பார்க்க கூடிய 28 ஊழியர்களுக்கு தொற்று உறுதியானது. உடனடியாக ஊழியர்கள் அனைவரும் ஓட்டலிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஓட்டல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுத்தம் செய்யும் பணியும் நடந்தது.

Tags:    

Similar News