தமிழ்நாடு செய்திகள்
அய்யப்ப பக்தர்கள்

கர்நாடக அய்யப்ப பக்தர்கள் மீது நடவடிக்கை - இரு மாநில முதல்வர்களுக்கு விவசாயிகள் கோரிக்கை

Published On 2022-01-10 13:47 IST   |   Update On 2022-01-10 13:47:00 IST
தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் செயல்படும் கர்நாடக அய்யப்ப பக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பம்:

தமிழக - கர்நாடக மாநிலங்களுக்கிடையே காவிரி, மேகதாது உள்ளிட்ட அணைப்பிரச்சினையில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. தமிழகத்துக்கு எதிராக கர்நாடகத்தில் வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து பீதியை ஏற்படுத்தி வருகின்றனர்.

இரு மாநில எல்லையில் அமைந்திருக்கும் தமிழக பெயர் பலகைகளை சேதப்படுத்துவதுடன் அங்கு கன்னட பெயர் பலகையையும் பொருத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகம் வழியாக கேரளா செல்லும் கர்நாடக அய்யப்ப பக்தர்களும் சமீப காலமாக பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். வாட்டாள் நாகராஜ் உருவம் பொறித்த மிகப்பெரிய பேனரை தங்கள் வாகனம் முன்பு கட்டிக் கொண்டு இரு மாநிலங்களுக்கு இடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் வகையில் கோ‌ஷங்களை எழுப்பி செல்கின்றனர்.

இது குறித்து 5 மாவட்ட பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சார்பில் தமிழக மற்றும் கர்நாடக முதல்வர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில், சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்ய செல்லும் கர்நாடக அய்யப்ப பக்தர்கள் தேவையின்றி தமிழகத்தில் வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டு கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் போது வைத்துள்ள கொடியை இன்று கட்டிக் கொண்டு சென்று வருகின்றனர். இது தமிழக விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே இது போன்ற பதட்டத்தை தணிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Similar News