தமிழ்நாடு
ஆவடி பஸ் நிலையத்தில் பள்ளி மாணவிகள் கட்டிப் புரண்டு மோதல்

ஆவடி பஸ் நிலையத்தில் பள்ளி மாணவிகள் கட்டிப் புரண்டு மோதல்

Published On 2021-12-08 09:34 GMT   |   Update On 2021-12-08 09:34 GMT
மாணவர்களுக்கு போட்டியாக மாணவிகளும் பஸ் நிலையத்தில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்கள், பயணிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி:

ரூட் தல தகராரில் பஸ், ரெயில்களில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கோஷ்டிகளாக மோதிக்கொள்ளும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து உள்ளனர். எனினும் மாணவர்கள் கோஷ்டிகளாக மோதிக் கொள்ளும் சம்பவம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் மாணவர்களுக்கு சமமாக மாணவிகளும் கோஷ்டிகளாக மோதிக்கொண்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆவடி பஸ் நிலையத்தில் பள்ளி சீருடையுடன் சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. 2 கோஷ்டிகளாக அவர்கள் பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இந்த தாக்குதலின் போது மாணவிகள் கீழே விழுந்தனர். எனினும் எதிர் கோஷ்டி மாணவிகள் கட்டி புரண்டு மோதலில் ஈடுபட்டனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள், கண்டக்டர் மாணவிகளை சமாதானம் செய்ய முயன்றனர்.

ஆனாலும் மாணவிகள் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது பெண் பயணி ஒருவர் மாணவிகளை சமாதானம் செய்ய கெஞ்சுகிறார். அவரையும் மோதலில் ஈடுபட்ட மாணவிகள் கண்டுகொள்ளவில்லை.

இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மாணவர்களுக்கு போட்டியாக மாணவிகளும் பஸ் நிலையத்தில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்கள், பயணிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோதலில் ஈடுபட்ட மாணவிகள் அனைவரும் ஆவடியில் உள்ள அரசு பள்ளியில் படிப்பதாக தெரிகிறது. அவர்கள் கோஷ்டியாக பிரிந்து மோதிக் கொண்டதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் பயணம் செய்த மாணவி ஒருவர் மாணவருடன் சேர்ந்து படிக்கட்டில் தொங்கியபடி பிளாட்பாரத்தில் கால்களை உரசி சென்று சாகசம் செய்தார்.

இதேபோல், ஆவடியில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற அரசு பஸ்சில் மாணவர்கள் கும்பலாக பஸ்சின் படிக்கட்டு மற்றும் ஜன்னல்களில் தொங்கியபடி பயணம் செய்த காட்சியும் சமூக வலைதளங்களில் பரவியது.

பள்ளி, கல்லூரி மாணவர்களின் சாகச பயணத்திற்கும், கோஷ்டி மோதலுக்கும் முற்றுப்புள்ளி வைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News