செய்திகள்
தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூரில் கந்துவட்டி கொடுமையால் ஜவுளி கடை ஊழியர் தற்கொலை

Published On 2021-07-03 16:20 IST   |   Update On 2021-07-03 16:23:00 IST
ஸ்ரீவில்லிபுத்தூரில் கந்துவட்டி கொடுமையால் ஜவுளி கடை ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கீழப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 38), ஜவுளி கடை ஊழியர். இவரது மனைவி சிவகாமி.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகுமார் அதே ஊரைச் சேர்ந்த காளி என்பவர் மூலம் ராமு என்ற ராமசாமியிடம் ரூ. 40,000 கடன் வாங்கினார். 3 சதவீத வட்டி என்ற நிபந்தனையின் பேரில் அவர் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெரும் தொகையை கொடுத்த பிறகும் கடன் கொடுத்தவர்கள் நீ கொடுத்தது வட்டிக்கு சரியாகிவிட்டது, இன்னும் ரூ.30 ஆயிரம் தரவேண்டும் என கூறியுள்ளனர்.

மேலும் அவர்கள் சிவகுமாரின் மோட்டார் சைக்கிளையும் எடுத்துச் சென்றுவிட்டனர். அதன் பிறகு சிவகுமார் கூடுதல் தொகையை வட்டிக்கு பணம் கொடுத்தவரிடம் கொண்டு கொடுத்து விட்டு தனது மோட்டார் சைக்கிளை கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் அதனை விற்றுவிட்டதாக தெரிவித்தனர்.

இதனால் மனமுடைந்த சிவகுமார், மனைவியிடம் கந்துவட்டி கொடுமை குறித்து தெரிவித்துள்ளார். அதன்பிறகு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சிவகாமிக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர்கள் உங்கள் கணவர் சிவகுமார் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்படுவதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சிவகாமி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிவகுமார் இறந்துவிட்டார்.

இதனை தொடர்ந்து கந்துவட்டி கொடுமையால் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் சிவகாமி புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி காளியை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News