செய்திகள்
கோடீஸ்வரன்

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளிக்கு ஜெயில்

Published On 2021-05-11 15:30 GMT   |   Update On 2021-05-11 15:30 GMT
ஈரோட்டில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளிக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
ஈரோடு:

ஈரோடு அசோகபுரம் கலைமகள் வீதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (வயது 60). இரவு காவலராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 19-8-2019 அன்று மாலையில் வீட்டில் இருந்தார். அப்போது அங்குள்ள ஒரு மைதானத்தில் 6 வயது சிறுமி விளையாடிக் கொண்டு இருந்தார். குழந்தையை பார்த்த கோடீஸ்வரன் குழந்தையின் அருகில் சென்று பேச்சுக்கொடுத்தார். அப்போது அந்த சிறுமியிடம் தனது வீட்டில் சாக்லேட் இருப்பதாக கூறி வீட்டுக்குள் அழைத்துச்சென்றார்.

அங்கு சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். அங்கிருந்து ஓட முயன்ற சிறுமிக்கு நிறைய சாக்லேட் தருவதாக கூறி மீண்டும் தொல்லை கொடுத்து இருக்கிறார். பின்னர் சிறுமி வீட்டுக்கு சென்றார்.

கடந்த 21-8-2019 அன்று உடல் நிலை சரியில்லாமல் சிறுமி பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டில் இருந்தாள். அப்போது பெற்றோரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது 2 நாட்களுக்கு முன்பு கோடீஸ்வரன் செய்த நடவடிக்கைகள் குறித்து கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டு கொண்டனர். மேலும் இதுபற்றி ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து கோடீஸ்வரனை கைது செய்தனர். இதுதொடர்பாக ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை நீதிபதி ஆர்.மாலதி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில், 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி கோடீஸ்வரனுக்கு, 2 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறி இருந்தார்.

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசின் நிதியில் (பாலியல் தொல்லையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில்) இருந்து ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும். தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று நீதிபதி ஆர்.மாலதி அந்த தீர்ப்பில் கூறிஇருந்தார்.

இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜர் ஆனார்.
Tags:    

Similar News