செய்திகள்
கொரோனா வைரஸ்

தனியார் நிறுவன ஊழியர்கள் 69 பேருக்கு கொரோனா

Published On 2021-04-18 04:03 GMT   |   Update On 2021-04-18 04:03 GMT
நஞ்சை ஊத்துக்குளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று வந்த பொதுமக்கள் யாருக்காவது காய்ச்சல், சளி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மொடக்குறிச்சி அடுத்த நஞ்சைஊத்துக்குளியில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த வாரம் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த சில வடமாநில தொழிலாளர்களுக்கு சளி, காய்ச்சல் இருந்ததால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 10 தொழிலாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதனை அடுத்து ஆர்.டி.ஓ. சைபுதீன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் சவுண்டம்மாள் ஆகியோர் தலைமையிலான குழுவினர் அந்த நிறுவனத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு அவர்கள் தங்கி உள்ள விடுதி வளாகத்திலேயே முகாம் அமைத்து பரிசோதனை செய்யப்பட்டது.

இதன் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 69 தொழிலாளர்களுக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் அனைவரும் நசியனூரில் உள்ள தனியார் மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் ஆர்.டி.ஓ. சைபுதீன், தாசில்தார் சங்கர் கணேஷ், மொடக்குறிச்சி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் இளங்கோ ஆகியோர் மீண்டும் அந்த நிறுவனத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சுகாதாரத்துறை சார்பில் அந்த நிறுவனம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனம் மூடப்பட்டது. அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அருகில் இருக்கும் கடைகளுக்கு சென்று வந்ததால் நஞ்சை ஊத்துக்குளி சுற்றுவட்டார பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு நேற்று முதல் கொரோனா பரிசோ தனை தொடங்கியது. கடைக்காரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆர்.டி.ஓ. சைபுதீன் கூறியதாவது:-

நஞ்சை ஊத்துக்குளி தனியார் நிறுவனத்தில் 69 பேருக்கு தொற்று இருந்ததை அடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக நசியனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் அருகில் உள்ள கடைகளுக்கும் சென்று வந்துள்ளனர். எனவே 4 நாட்களுக்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கடைக்காரர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பரிசோதனை செய்த நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அந்த கடைகள் திறக்கப்படமாட்டாது. தொற்று இல்லை என தெரிந்தால் மட்டுமே அந்த கடைகள் திறக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் நஞ்சை ஊத்துக்குளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று வந்த பொதுமக்கள் யாருக்காவது காய்ச்சல், சளி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் அதிகளவில் தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்களிலும் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு காய்ச்சல் பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News