செய்திகள்
பணம் கொள்ளை

சிவகாசியில் காகித ஆலையில் ரூ.1 கோடி கொள்ளை- மர்ம நபர்கள் துணிகரம்

Published On 2021-03-22 13:03 IST   |   Update On 2021-03-22 13:03:00 IST
சிவகாசியில் காகித ஆலை நிர்வாக தரப்பில் ரூ.1 கோடி கொள்ளை போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவர் அதே பகுதியில் உள்ள திருத்தங்கல் ரோட்டில் கிங் போர்ட்ஸ் என்ற பெயரில் காகித தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இங்கு காகித அட்டை, பேப்பர்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது தேர்தல் விதிகள் அமலில் உள்ளதால் வசூலான பணம் வங்கியில் செலுத்த முடியாமல் ஆலையில் உள்ள லாக்கரில் வைத்திருந்தனர்.

நேற்று முன்தினம் ஊழியர்கள் ஆலையை மூடிவிட்டு சென்று விட்டனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் ஆலை திறக்கப்படவில்லை.

நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் ஆலையின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் ஆலையின் நிர்வாக அறைக்கு சென்ற அவர்கள் அங்கிருந்த லாக்கரை வெல்டிங் எந்திரம் மூலம் உடைத்து அதில் இருந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இன்று காலை வேலைக்கு வந்த ஊழியர்கள் ஆலை ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது ஆலை நிர்வாக தரப்பில் ரூ.1 கோடி கொள்ளை போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டன.

இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News