செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டத்தில் 80 சதவீதம் பட்டாசு ஆலைகள் இன்று மூடப்பட்டன

Published On 2021-03-08 11:36 GMT   |   Update On 2021-03-08 11:36 GMT
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 80 சதவீத பட்டாசு ஆலைகள் இன்று (8-ந் தேதி) முதல் மூடப்பட்டன. இதனால் அந்த ஆலைகளில் பணி செய்து வந்த தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் 996 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் நாக்பூர் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அனுமதியுடன் இயங்குபவை 731. மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்று செயல்படுபவை 265.

இந்த பட்டாசு ஆலைகளில் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதில் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதனை தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

இருப்பினும் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த மாதம் 12-ந் தேதி நடந்த வெடி விபத்தில் 24 தொழிலாளர்கள் இறந்தனர்.

சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சி பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். அதே நாளில் வி.சொக்கலிங்காபுரத்தில் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து பட்டாசு ஆலைகளில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினர் ஆய்வு செய்தனர். இதில் விதிகளை மீறி செயல்பட்டதாக 41 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் விதிமீறல் இருந்தால் பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் இதற்காக அடிக்கடி சோதனை நடத்தவும் அதிகாரிகள் முடிவு செய்தனர்.

வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு சீல் வைக்கும் பட்டாசு ஆலைகளுக்கு மீண்டும் உரிமம் வாங்க வேண்டும் என்றால் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டி உள்ளது. இதனால் பட்டாசு ஆலைகள் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளன.

இதுபோன்ற சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும், பட்டாசு ஆலைகளை பாதுகாக்கவும், தாங்களாகவே முன் வந்து விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை மூடுவது என ஆலை உரிமையாளர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 80 சதவீத பட்டாசு ஆலைகள் இன்று (8-ந் தேதி) முதல் மூடப்பட்டன. இதனால் அந்த ஆலைகளில் பணி செய்து வந்த தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இது குறித்து சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க தலைவர் மகாலட்சுமி, செயலாளர் தேவா ஆகியோர் கூறுகையில், பட்டாசு தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்றனர். 

Tags:    

Similar News