செய்திகள்
பட்டாசு ஆலை வெடிவிபத்து (கோப்புப்படம்)

சிவகாசி அருகே இன்று மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- தொழிலாளி படுகாயம்

Published On 2021-02-13 13:19 IST   |   Update On 2021-02-13 13:19:00 IST
சிவகாசி அருகே இன்று மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தொழிலாளி ஒருவர் படுகாயம் அடைந்தார்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் நேற்று பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு 19 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் ஆஸ்பத்திரிகளில் உயிருக்கு போராடி வருகிறார்கள்.

இந்த சோகம் மறைவதற்குள் மற்றொரு பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு இருப்பது விருதுநகர் மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. அந்த ஆலையில் சுமார் 120 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இன்று காலை அவர்கள் வழக்கம்போல் வேலைக்கு வந்தனர். சிறிது நேரத்தில் ரசாயன மருந்து கலவை தயாரிக்கும் இடத்தில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அங்கு கரும்புகை மண்டலமாக காணப்பட்டது.

வெடிவிபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இங்கு வெடி விபத்தில் சுரேஷ் (வயது32) என்ற தொழிலாளி படுகாயம் அடைந்தார். உடனே அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Similar News