செய்திகள்
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி- நாராயணசாமி தீவிர ஆலோசனை

Published On 2021-02-03 09:13 GMT   |   Update On 2021-02-03 09:13 GMT
அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு காலியாக உள்ள அமைச்சர் பதவிகளை வழங்கி கட்சியில் இருந்து வெளியேறுவதை தடுக்க முதலமைச்சர் நாராயணசாமி முடிவெடுத்து உள்ளதாக தெரிகிறது.
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மீதான அதிருப்தியால் அமைச்சர், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து நமச்சிவாயம் பா.ஜனதாவில் இணைந்தார்.

அவருடன் ஊசுடு தனி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த தீப்பாய்ந்தானும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இணைந்தார். ஏற்கனவே புதுவை அரசியலில் இருந்து விலக முடிவெடுத்துள்ள மல்லாடிகிருஷ்ணராவ், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் கடிதம் கொடுத்துள்ளார்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி இந்த கடிதத்தை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், மல்லாடி கிருஷ்ணாராவ் அமைச்சர் அலுவலகம், வீடு, கார் ஆகியவற்றை அரசிடம் திரும்ப ஒப்படைத்து விட்டார். தனது துறைகள் தொடர்பான எதனையும் அவர் கவனிப்பதில்லை.

இதனால் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் துறைகளை முதல்-அமைச்சர் நாராயணசாமியே கூடுதலாக கவனித்து வருகிறார்.

அமைச்சர்கள் பதவி விலகல், தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. விலகல், பா.ஜனதாவில் இணைந்தது ஆகியவை புதுவை காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைய உள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. இதனை தடுக்க முதல்-அமைச்சர் நாராயணசாமி பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார்.

சமீபத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கட்சியின் மேலிட பார்வையாளர்கள் தினேஷ் குண்டுராவ், வீரப்பமொய்லி, பல்லம்ராஜூ, சஞ்சய்தத், ராவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அவர்களை தனியாக சந்தித்த எம்.எல்.ஏ.க்கள், காலியாக உள்ள அமைச்சர் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் சுழற்சி அடிப்படையில் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதனையடுத்து அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு காலியாக உள்ள அமைச்சர் பதவிகளை வழங்கி கட்சியில் இருந்து வெளியேறுவதை தடுக்க நாராயணசாமி முடிவெடுத்து உள்ளதாக தெரிகிறது.

கட்சி மேலிடத்திடம் இதுதொடர்பாக பேசி வருகிறார். யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது? என்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. புதிதாக அமைச்சர் பதவி வழங்கினால் மற்ற எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அடைந்து கட்சியை விட்டு வெளியேறக்கூடாது என்றும் நாராயணசாமி ஆலோசித்து வருகிறார்.

இதில் முடிவெடுக்கும் பட்சத்தில் ஓரிரு நாளில் புதிய அமைச்சர் பதவி நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News