செய்திகள்
சிகிச்சை பலனின்றி இறந்த ஆண் யானையை படத்தில் காணலாம்.

கண்டெய்னர் லாரி மோதி படுகாயமடைந்த ஆண் யானை சிகிச்சை பலனின்றி பலி

Published On 2021-01-17 07:49 GMT   |   Update On 2021-01-17 07:49 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கண்டெய்னர் லாரி மோதியதில் படுகாயமடைந்த ஆண் யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதுதொடர்பாக டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சான மாவு வனப்பகுதியில் ஆண்டு தோறும் 100-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த மாதம் 100-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் சான மாவு பகுதிக்குள் வந்தன. இவை பல குழுக்களாக பிரிந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

இதையடுத்து வனத்துறையினர் போராடி யானைகள் கூட்டத்தை காட்டுக்குள் விரட்டியடித்தனர்.

இந்த நிலையில் ஓசூர் அருகே பேரண்டபள்ளியில் கிருஷ்ணகிரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு ஆண் யானை சாலையை கடக்க முயன்றது.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு கண்டெய்னர் லாரி, திடீரென யானை மீது மோதியது. இதில் யானையின் பின்னங்கால், வயிற்று பகுதியில் பலமாக அடிபட்டு சாலையில் விழுந்து கிடந்தது.

இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், அதிர்ச்சி அடைந்து வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வாகனங்களை ஒழுங்குப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.

இதற்கிடையே அங்கு வந்த வனத்துறையினர் அடிபட்டு கிடந்த யானைக்கு கால்நடை மருத்துவர் உதவியுடன் முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் யானையால் அசையக் கூட முடியாமல் சுருண்ட நிலையில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தது.

இந்த நிலையில் கால்நடை மருத்துவர் குழுவினர், யானையை காப்பாற்ற கடுமையாக போராடினர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஆண் யானை பரிதாபமாக இறந்தது.

இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி டிரைவரான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த சோலைமுத்து (35) என்பவர் மீது வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News