செய்திகள்
நாராயணசாமி

கவர்னர் கிரண்பேடியை கண்டித்து மழையிலும் நாராயணசாமி விடிய, விடிய போராட்டம்

Published On 2021-01-09 10:17 GMT   |   Update On 2021-01-09 10:17 GMT
புதுவை கவர்னர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி நாராயணசாமி விடிய, விடிய போராட்டம் நடத்தினார்.

புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி ஆளும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் சார்பில் 4 நாள் தொடர் தர்ணா போராட்டம் நேற்று தொடங்கியது.

புதுவை மறைமலையடிகள் சாலையில் அண்ணா சிலை அருகே நடந்த போராட்டத்துக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத், புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர். கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க.வினர் பங்கேற்கவில்லை.

காலை 10.30 மணிக்கு தொடங்கிய போராட்டத்தில் மதியம் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு உணவு பரிமாறப்பட்டு அங்கேயே சாப்பிட்டனர். இரவிலும் போராட்டம் தொடர்ந்தது.

போராட்ட களத்திலே முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் கூட்டணி தலைவர்கள் தங்கினர். இரவு உணவுக்கு பின் போராட்டக் களத்திலேயே அவர்கள் தூங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அங்கிருந்த சேர்கள் அகற்றப்பட்டு படுக்கை மற்றும் விரிப்புகள் அமைக்கப்பட்டது. இதையடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் தரையில் படுத்து தூங்கினார்கள். இரவு சாரல் மழை பெய்தது.

மழை மற்றும் குளிரை பொருட்படுத்தாமல் நாராயணசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் போராட்ட களத்தில் தரையில் படுத்து தூங்கினார்கள். இன்று (சனிக்கிழமை) 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

Tags:    

Similar News