செய்திகள்
முதுமலையில் இருந்து வண்டலூர் பூங்காவிற்கு கொண்டுவந்து வளர்க்கப்படும் 2 ஆண் புலிக்குட்டிகளை படத்தில் காணலாம்.

வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட 2 புலிக்குட்டிகள் ஆரோக்கியத்துடன் உள்ளன- பூங்கா அதிகாரி தகவல்

Published On 2020-12-20 07:49 IST   |   Update On 2020-12-20 07:49:00 IST
தாய்ப்புலி இறந்ததால், முதுமலையில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட 2 புலிக்குட்டிகள் ஆரோக்கியத்துடன் உள்ளன என பூங்கா அதிகாரி தெரிவித்துள்ளார்.
வண்டலூர்:

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனச்சரகத்தில் உள்ள சீமர்குழி ஓடை பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 21-ந்தேதி 7 வயது மதிக்கத்தக்க பெண் புலி மர்மமான முறையில் இறந்து கிடந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்த போது பெண் புலி இறந்து கிடந்த இடத்திற்கு அருகே பிறந்து சில நாட்களே ஆன 2 ஆண் புலிக்குட்டிகள் சுற்றி கொண்டிருந்தன.

இதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் உடனடியாக அந்த புலிக்குட்டிகளை மீட்டனர்.

மீட்கப்பட்ட 2 புலிக்குட்டிகளை நீலகிரி மாவட்டத்தில் வைத்து பராமரிப்பதற்கு சிறப்பு மையங்கள் இல்லாததால் வண்டலூர் பூங்காவுக்கு அனுப்புவதற்கு வனத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதனையடுத்து முதுமலையில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் கடந்த நவம்பர் மாதம் 23-ந்தேதி இரவு வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு பூங்காவில் உள்ள அதிகாரிகளிடம் 2 ஆண் புலிக்குட்டிகள் ஒப்படைக்கப்பட்டன. பூங்கா அதிகாரிகள் அதனை வண்டலூர் பூங்கா வளாகத்தில் விலங்குகள் ஆஸ்பத்திரி அருகில் உள்ள சிறப்பு விலங்குகள் சிகிச்சை மையத்தில் வைத்து ஒரு கால்நடை மருத்துவர் தலைமையில் சிறப்பு கவனம் செலுத்தி தொடர்ந்து பராமரித்து வந்தனர்.

இது குறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

முதுமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட 2 புலிக்குட்டிகளும் கை வளர்ப்பில் வளர்க்கப்படுகிறது. சிறப்பு மையத்தில் உள்ள புலிக்குட்டிகளின் அசைவுகளை தொடர்ந்து கண்காணிப்பு கேமரா மூலம் ஊழியர்கள் கண்காணிக்கின்றனர். 45 நாட்களான இந்த 2 புலிக்குட்டிகளும், நல்ல ஆரோக்கியத்துடன் துள்ளி குதித்து விளையாடுகின்றன. 2 புலிக்குட்டிகளுக்கு அதிக அளவில் சத்து நிறைந்த பால் பவுடரில் ஊட்டச்சத்து மருந்துகள் கலந்து உணவாக வழங்கப்படுகிறது. சில சமயங்களில் ஆட்டுப்பாலும் வழங்கப்படுகிறது. புலிக்குட்டிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளும் பால் பவுடரில் கலந்து வழங்கப்படுகிறது. 60 நாட்களுக்கு பிறகு புலிக்குட்டிகளின் எலும்பு வளர்ச்சி அடைவதற்காக சிக்கன் சூப் வழங்கப்படும்.

3½ மாதம் கழித்துதான் இந்த புலிக்குட்டிகளை வண்டலூர் பூங்காவில் வைத்து வளர்க்கலாமா? அல்லது முதுமலை காட்டுப்பகுதியில் விட்டுவிடலாமா? என்பது குறித்து உயர் வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள் அதுவரை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இந்த 2 புலிக்குட்டிகளும் பராமரிக்கப்படும் தற்போது வண்டலூர் பூங்காவில் வங்கப்புலிகள், வெள்ளைப்புலிகள் மற்றும் கலப்பின புலிகளுடன் சேர்ந்து மொத்தம் 34 புலிகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News