செய்திகள்
லாரிகள்

தமிழகத்தில் 27ந்தேதி முதல் 12 லட்சம் லாரிகள் ஓடாது- சம்மேளன தலைவர் பேட்டி

Published On 2020-12-19 12:59 IST   |   Update On 2020-12-19 12:59:00 IST
தமிழகத்தில் 27-ந்தேதி முதல் மினி, கனரகம் என 12 லட்சம் லாரிகள் ஓடாது என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறினார்.
வேலூர்:

வேலூரில் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதைத்தொடர்ந்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

லாரிகளில் வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை 12 கம்பெனிகளில் மட்டுமே வாங்க வேண்டும் என தமிழக அரசு நிர்பந்தம் செய்கிறது. அங்கு வாங்கினால் தான் தரச்சான்று வழங்கபடும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

லாரிகளில் பொருத்தும் ஜி.பி.எஸ்.கருவிகளையும் அவர்கள் கூறும் 8 கம்பெனிகளில் தான் வாங்க வேண்டும் என்கின்றனர்.

இதனால் எங்களுக்கு 5 முதல் 10 மடங்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதுதவிர ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களும் குறிப்பிட்ட 2 கம்பெனிகளில் தான் வாங்கவேண்டும் என்ற கட்டாயப்படுத்துகின்றனர்.

இதை கண்டித்து தமிழகத்தில் வருகிற 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளது. எனவே முதல் அமைச்சர் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணவேண்டும்.

நாங்கள் போராட்டம் நடத்தினால் ரூ.5 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிப்பு ஏற்படும். பால், தண்ணீர், மருந்து பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகள் தவிர பிற லாரிகள் ஓடாது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் லாரிகள் இயங்காது. இதற்கு பிற மாநில உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.

இந்த போராட்டத்தால் தமிழகத்தில் 27-ந்தேதி முதல் மினி, கனரகம் என 12 லட்சம் லாரிகள் ஓடாது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 15 ஆயிரம் லாரிகள் ஓடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News