செய்திகள்
குழந்தை

காரைக்குடியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஒரு மாத ஆண் குழந்தை மீட்பு

Published On 2020-12-11 18:32 IST   |   Update On 2020-12-11 18:32:00 IST
காரைக்குடியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஒரு மாத ஆண் குழந்தையை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
காரைக்குடி:

காரைக்குடி செக்காலை முதல் வீதியை சேர்ந்தவர் அருண் ஆரோக்கியம் (வயது 27). கட்டிட காண்டிராக்டரான இவர் தைனீஸ்வரி (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்திற்கு அருண் ஆரோக்கியத்தின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அருண் ஆரோக்கியம் தனது மனைவியுடன் அதே பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். கடந்த மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்தவுடன் அருண் ஆரோக்கியத்தின் குடும்பத்தினர் சமரசம் ஆகி விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி சம்பவத்தன்று தனது பேரனை பார்க்க அருண் ஆரோக்கியத்தின் தாயார் ராஜேஸ்வரி மகன் வீட்டுக்கு சென்றார்.

அங்கு பேரனை கையில் எடுத்து ராஜேஸ்வரி ஆசையுடன் கொஞ்சினார். பின்னர் வெளியில் அழைத்துச் சென்று வருவதாக கூறிவிட்டு குழந்தையை எடுத்துச் சென்றார்.

ஆனால் அதன் பிறகு அவர் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து தைனீஸ்வரி குழந்தை எங்கே என்று மாமியாரிடம் கேட்டார்.

அதற்கு அவர் 2-வது வீதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது காரில் வந்த சிலர் குழந்தையை தூக்கிச் சென்று விட்டதாக கூறினார். இதனால் தைனீஸ்வரி அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்

அப்போது மாமியார் ராஜேஸ்வரி குழந்தையை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜேஸ்வரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News