செய்திகள்
பட்டாசுகள்

பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடி வரும் பெரம்பூர் கிராம மக்கள்

Published On 2020-11-09 08:31 IST   |   Update On 2020-11-09 08:31:00 IST
பறவைகளை பாதுகாப்பதற்காக பட்டாசு வெடிக்காமல் பெரம்பூர் கிராம மக்கள் தீபாவளி கொண்டாடி வருகிறார்கள்.
கொள்ளிடம்:

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பெரம்பூர் கிராமம் உள்ளது. இந்த கிராமம் எப்போதும் பசுமையாக இயற்கை எழில் நிறைந்த கிராமமாக திகழ்ந்து வருகிறது. இந்த பகுதியில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் கூட்டமாக வந்து தங்கி உள்ளது. இந்த பகுதியில் நீர்க்காகம், செந்நாரை, கொக்கு வகை பறவைகள் அதிக அளவில் தங்கியுள்ளன.

பெரம்பூர் கிராமத்தில் உள்ள மரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வேப்பமரம், வேங்கை மரம், ஆலமரம், மாமரங்களில் கூடு அமைத்து வாழ்ந்து வருகிறது. தற்போது அந்தப்பகுதி பறவைகள் சரணாலயமாக திகழ்ந்து வருகிறது. இந்த பறவைகள் இங்கு தங்கி தனது குஞ்சுகளுடன் மார்ச் மாதம் தனது சொந்த ஊருக்கு திரும்பி விடும். அதுவரை இங்கு இந்த பகுதி மக்கள் அந்த பறவைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று இந்த பகுதி மக்கள் பறவைகளை பாதுகாப்பதற்காக பட்டாசு வெடிப்பது கிடையாது.

அந்த பகுதி கிராம மக்கள் கூறுகையில், பெரம்பூர் கிராமம் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதியில் அமைந்து இருப்பதால் பறவைகள் இனப்பெருக்கத்திற்கும், அவை அங்கு தங்குவதற்கும் ஏற்ற சூழல் ஏற்பட்டு உள்ளது. பறவைகள் பெரம்பூர் கிராமத்தில் மட்டுமே இடத்தை தேர்வு செய்து தங்கி வாழ்ந்து வருகிறது. இப்பகுதியில் வெளிநாட்டு பறவைகள் மட்டுமில்லாமல் பழந்தின்னி வவ்வால்கள் அதிகமாக காணப்படுகிறது.

எனவே இந்த பகுதி எப்போதும் இயற்கை சூழலுடன் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் குழு அமைக்கப்பட்டு பறவைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது பறவைகள் வருகையால் பெரம்பூர் கிராமம் விழாக்கோலம் கொண்டுள்ளது. நாங்கள் பறவைகளை பாதுகாப்பதற்காக தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிப்பது இல்லை. எனவே இந்த கிராமம் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராமமாக திகழ்கிறது.

Similar News