செய்திகள்
தியேட்டர்

புதுவையில் தியேட்டர்கள் திறப்பு

Published On 2020-10-15 08:23 GMT   |   Update On 2020-10-15 08:23 GMT
புதுவையில் இன்று தியேட்டர்கள் திறக்கப்பட்டு படங்கள் திரையிடப்பட்டன.
புதுச்சேரி:

கொரோனா காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அடுத்தடுத்து பல்வேறு கட்டங்களாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன்படி கடைகள், ஓட்டல்கள், கடற்கரை, போக்குவரத்து, பள்ளிகள் திறப்பு என மாமூல் வாழ்க்கைக்கு திரும்பின. பொழுதுபோக்கு அம்சமான தியேட்டர்கள் திறக்கப்படுவது எப்போது? என்ற எதிர்பார்ப்பில் அனைத்து தரப்பு மக்களும் இருந்து வந்தனர்.

இந்தநிலையில் தற்போது மத்திய அரசு கடந்த 30-ந் தேதி வெளியிட்ட 5-வது கட்ட தளர்வில் கொரோனா விதிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை பின்பற்றி தியேட்டர்களை திறக்கலாம் என்பது உள்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

அதன்படி புதுவையில் ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் தீர்வு அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் புதுவையில் இன்று முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டு சினிமா காட்சிகள் திரையிடப்பட்டன.

நாள் ஒன்றுக்கு 3 காட்சிகள் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்த அளவிலான டிக்கெட்டுகளே விநியோகம் செய்யப்படுகிறது.

தியேட்டர்களுக்கு வரும் பார்வையாளர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் வழங்கப்படுகிறது. ஒரு இருக்கை இடைவெளி விட்டு பார்வையாளர்கள் அமர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தியேட்டர்கள் 25-30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அளவுடன் ஏசி பயன்படுத்தப்படுகிறது.

Tags:    

Similar News