செய்திகள்
இயற்கை எழில் கொஞ்சும் கோத்தகிரி நேரு பூங்கா

கோத்தகிரி நேரு பூங்கா திறக்கப்படுமா?- சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

Published On 2020-09-21 10:54 GMT   |   Update On 2020-09-21 10:54 GMT
கோத்தகிரி நேரு பூங்கா திறக்கப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
கோத்தகிரி:

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுகிறது. அடுத்து செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசன் நடைபெறுகிறது. இந்த சீசன் காலங்களில் நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. மேலும் சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. இதன் காரணமாக கோடை சீசன் களையிழந்தது.

இந்த நிலையில் தற்போது 2-வது சீசன் நடைபெற்று வருகிறது. மேலும் இ-பாஸ் பெற்று சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்படுகின்றனர். இது தவிர தோட்டக்கலை பூங்காக்கள் திறக்கப்பட்டு உள்ளன. எனினும் கோத்தகிரியில் உள்ள நேரு பூங்கா மட்டும் திறக்கப்படவில்லை. கோத்தகிரியில் கேத்தரின் நீர்வீழ்ச்சி, கோடநாடு காட்சி முனை, ஜான் சல்லீவன் நினைவகம் மற்றும் பூங்கா, லாங்வுட் சோலை, ரங்கசாமி மலைச்சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அமைந்து உள்ளன. எனினும் முக்கியமான சுற்றுலா தலமாக கோத்தகிரி நேரு பூங்கா விளங்கி வருகிறது. இந்த பூங்கா கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் காமராஜர் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ளது.

கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 65 சென்ட் நிலப்பரப்பில் பல்வேறு வண்ண மலர் செடிகள், புல் தரைகள், சிறுவர் விளையாட்டு பூங்கா, ரோஜா தோட்டம் மற்றும் கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனோர், அம்மனோர் கோவிலுடன் இந்த பூங்கா அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்து உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனையொட்டி கோடை விழா தொடங்கும்போது விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் 2 நாட்கள் தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த கண்காட்சியை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு வருவார்கள்.

உள்ளூர் மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானதாக விளங்கும் நேரு பூங்காவானது ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் வருகை இருப்பதை கருத்தில் கொண்டு கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகத்தால் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாத இறுதியில் நீலகிரியில் சுற்றுலா தலங்கள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோத்தகிரி நேரு பூங்காவும் மூடப்பட்டது. எனினும் பூங்கா ஊழியர்கள் தொடர்ந்து பூங்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர். கடந்த 1-ந் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதால், ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில் உள்ள தோட்டக்கலை பூங்காக்களை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால் கோத்தகிரி நேரு பூங்காவை திறப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் ஊழியர்கள் தொடர்ந்து பராமரிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் எப்போது வேண்டுமானாலும் திறப்பதற்கு ஏதுவாக தயார் நிலையில் பூங்கா இருக்கிறது.

அங்குள்ள மலர் செடிகளில் பல்வேறு வண்ண மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. மேலும் புல்தரைகள் பச்சை பசேல் என காட்சியளிக்கின்றன. தொடர்ந்து மழையும் பெய்து வருவதால், இயற்கை எழிலில் பூங்கா காட்சியளிக்கிறது. பூங்காவில் மலர்கள் பூத்துக்குலுங்கியும் அதனை ரசிக்க ஆள் இல்லை. சமவெளி பகுதியில் இருந்து கோத்தகிரி வழியாக ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் நேரு பூங்கா திறந்து உள்ளதா? என்று பார்த்துவிட்டு, அது பூட்டி கிடப்பதை கண்டு ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்கின்றனர். நீலகிரிக்கு இ-பாஸ் பெற்று சுற்றுலா பயணிகள் வர அனுமதித்தும், சுற்றுலா தலங்களை மூடி வைத்து உள்ளனர். எனவே அனைத்து சுற்றுலா தலங்களையும் திறப்பதோடு, கோத்தகிரி நேரு பூங்காவையும் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News