செய்திகள்
மழை

கோவை, நீலகிரியில் பலத்த மழை: பில்லூர், பரம்பிக்குளம் அணைகள் நிரம்பின

Published On 2020-09-20 07:05 GMT   |   Update On 2020-09-20 07:05 GMT
கோவை, நீலகிரி பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பில்லூர் மற்றும் பரம்பிக்குளம் அணைகளின் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

குன்னூர்:

நீலகிரி மாவட்டம் கூடலூரில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. நேற்று காலையும் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தொடர்ந்து இரவு முழுவதும் சாரல் தூறி கொண்டே இருந்ததால் இன்று காலை கடும் குளிர் நிலவியது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியவில்லை.

குறிப்பாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுதவிர கூடலூரை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பந்தலூர், தேவாலா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. குறிப்பாக காற்று பலமாக வீசியது. தொடர்ந்து இரவு முழுவதும் சூறாவளி காற்று வீசி கொண்டே இருந்தது.

இதனால் பொதுமக்கள் ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விடுமோ என அச்சம் அடைந்தனர். ஆனாலும் எந்தவித பாதிப்பும் ஏற்படாதது மக்களுக்கு நிம்மதியை கொடுத்தது. இதேபோல் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. தொடர் மழையால் விவசாயிகள், தேயிலை தோட்ட விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால், மார்க்கெட் பகுதி சேறும், சகதியுமாக உள்ளது. மழை காரணமாக சோலையார் அணை, வாழைத்தோட்டம் ஆறு, கூழாங்கல் ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. இதேபோல் கோவை மாநகர், புறநகர் பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.

கோவை சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. 50 அடி கொண்ட சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 43.2 அடியாக உள்ளது.

நீலகிரி மற்றும் கேரள நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 100 அடி கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிரம்பியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 97 அடியாக உள்ளது.

அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து மின்சார உற்பத்திக்காக 3 ஆயிரம் கன அடி தண்ணீர், 4 மதகுகள் வழியாக 4 ஆயிரத்து 120 கனஅடி தண்ணீர் என மொத்தம் 7 ஆயிரத்து 120 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஏற்கனவே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பில்லூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. தற்போது 2-வது முறையாக பில்லூர் அணை மீண்டும் நிரம்பியுள்ளது.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் பி.ஏ.பி.திட்டத்தில் அதிக கொள்ளளவு கொண்ட அணையான பரம்பிக்குளம் அணை தனது முழு கொள்ளளவான 72 கன அடியை எட்டியது. தற்போது அணைக்கு 3 ஆயிரத்து 420 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி தூணக்கடவு அணைக்கு 1050 கன அடி, 3 மதகுகள் வழியாக 2 ஆயிரத்து 370 கன அடி தண்ணீர் அரபி கடலுக்கு வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News