செய்திகள்
கலெக்டர் அருண்

அத்தியாவசிய பொருட்கள் வாங்க முகவர்கள் நியமனம்- கலெக்டர் தகவல்

Published On 2020-09-04 06:03 GMT   |   Update On 2020-09-04 06:03 GMT
கொரோனாவால் தனிமைபடுத்தப்பட்டவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க தொகுதிவாரியாக முகவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:

புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தவும், அதனை முற்றிலும் ஒழிக்கவும் பல உத்திகளை கையாண்டு அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் கொரோனா நோயாளிகளுடன் நெருக்கி பழகியவர்கள் அனைவரும் மருத்துவர் ஆலோசனைப்படி தங்களை தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் தனிமைபடுத்திக்கொள்ளும் போது தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியே வரக்கூடாது.

தனிமைபடுத்தப்பட்டவர்கள் குறிப்பாக அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறி போன்றவற்றை வாங்குவதற்கான வெளியே வருகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. எனவே அவர்கள் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு மூலமாக விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதுவை பிராந்தியத்தில் உள்ள 23 சட்டமன்ற தொகுதிகளிலும் தொகுதிக்கு ஒரு முகவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு முகவரும் குறைந்தது 5 வியாபாரிகள் கொண்ட குழுவாக இயங்குவார்கள். தனிமைபடுத்தப்பட்டவர்கள் தங்களுக்கு வேண்டிய அனைத்து அத்தியாவசிய பொருட்களை இந்த முகவர்கள் மற்றும் வியாபாரிகள் மூலமாக பெற்றுக்கொள்ளலாம். இந்த முகவர்கள் மற்றும் வியாபாரிகள் வாட்ஸ் அப் குரூப் அமைத்து இயங்குவார்கள். புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகள் செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. சிவசங்கர்-9443239933, பாலு-8668033939, தங்கமணி-9443236018, சித்திக்-9944071712, அவசர கால மையம்-1070,1077.

இவர்களின் ஒருங்கிணைப்பை புதுவை மாநில அவசர கால செயல் மையம் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு அறை செய்து கொடுக்கும். தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க விரும்புவோர் மாநில அவசர கால செயல் மையத்திற்கோ, அல்லது தங்கள் தொகுதியில் உள்ள முகவர்களுக்கோ, வியாபாரிகளுக்கோ தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாங்கிக்கொள்ளலாம். அவ்வாறு தனிமை படுத்தப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து கொண்டு கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு தொடர்பில்லா முறையில் அவர்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வார்கள். இது போன்று விற்பனை செய்பவர்கள் பொருட்களின் விலையை தவிர அதிகமான பணம் வாங்க மாட்டார்கள். இந்த சேவையை தனிமைபடுத்தப்பட்டவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News