செய்திகள்
கர்நாடக அரசு பஸ்சை படத்தில் காணலாம்.

தாளவாடிக்கு திடீரென வந்த கர்நாடக அரசு பஸ்

Published On 2020-08-24 17:23 IST   |   Update On 2020-08-24 17:23:00 IST
தளர்வு இல்லா முழு ஊரடங்கு நாளான நேற்று தாளவாடிக்கு திடீரென கர்நாடக அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சின் டிரைவர், கண்டக்டரை எச்சரித்து அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.
தாளவாடி:

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மேலும் பஸ், ரெயில் மற்றும் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் தளர்வில்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் தாளவாடி பகுதிக்கு நேற்று மதியம் திடீரென கர்நாடக அரசு பஸ் ஒன்று வந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் பஸ் போக்குவரத்து தொடங்கிவிட்டதோ? என ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

உடனே இதுபற்றி தாளவாடி தாசில்தார் ஜெகதீசனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். பின்னர் பஸ் டிரைவரிடம் அவர்கள், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. போக்குவரத்து சேவைக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே தாளவாடி பகுதிக்கு பஸ் இயக்கக்கூடாது. திரும்பி செல்லுங்கள்’ என்று எச்சரித்தனர். அதைத்தொடர்ந்து பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. முழு ஊரடங்கு காலத்தில் தாளவாடிக்கு வந்த கர்நாடக அரசு பஸ்சால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News