செய்திகள்
பலத்த மழையால் தேவாலா ஆற்றின் கரையோர தடுப்பு சுவர் உடைந்துள்ளதை படத்தில் காணலாம்.

கூடலூரில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு- தடுப்பு சுவர் உடைந்தது

Published On 2020-08-03 07:13 GMT   |   Update On 2020-08-03 07:13 GMT
கூடலூரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது/ ஆற்றின் கரையோர தடுப்புச்சுவரும் உடைந்தது. மரங்கள் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கூடலூர்:

நீலகிரி மாவட்டம் கூடலூரில் நேற்று மாலை 4 மணிக்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் கூடலூரில் இருந்து ஓவேலிக்கு செல்லும் சாலையில் கெவிப்பாரா என்ற இடத்தில் ராட்சத மரம் சரிந்து விழுந்தது. தொடர்ந்து அதே பகுதியில் நின்றிருந்த மற்றொரு சிறிய மரமும் விழுந்தது.

எனவே அப்பகுதியில் உள்ள மின்கம்பிகளும் அறுந்து விழுந்தன. இதன் காரணமாக கூடலூர் நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கொட்டும் மழையில் மின்வாள்கள் மூலம் அந்த மரங்களை அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் மின்வாரிய ஊழியர்களும் அங்கு வந்து அறுந்து கிடந்த மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பலத்த மழை பெய்ததால், சாலையில் விழுந்த மரங்களை உடனடியாக அகற்ற முடியவில்லை. பின்னர் மாலை 5.30 மணிக்கு அந்த மரங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன. தொடர்ந்து மின்கம்பிகளும் சீரமைக்கப்பட்டு மாலை 6 மணிக்கு மின்வினியோகம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

மழைக்காரணமாக பாண்டியாறு, மாயார், பொன்னானி, தேவாலா, சோலாடி உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் தேவாலா அருகே சோழவயல் என்ற இடத்தில் தேவாலா ஆற்றின் கரையோரம் கட்டப்பட்டு இருந்த தடுப்பு சுவரின் ஒரு பகுதி உடைந்தது. தொடர்ந்து மழை பெய்துவருவதால் ஆற்றின் கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News