செய்திகள்
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நடமாடும் மருத்துவ வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்ததை படத்தில் காணலாம்.

கொரோனா தடுப்பு மருத்துவ முகாம்களுக்கு 18 வாகனங்கள்- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2020-07-22 17:11 IST   |   Update On 2020-07-22 17:11:00 IST
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மருத்துவ முகாம்களுக்கு 18 வாகனங்களை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு மருத்துவ முகாம்கள் கிராமங்கள் தோறும் நடத்தப்படுகிறது. இதற்காக சுகாதாரத்துறை சார்பில் 16 வாகனங்கள், ஜெயின் சங்கம் சார்பில் 2 வாகனங்கள் என மொத்தம் 18 நடமாடும் வாகனங்கள் தயார்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று கொரோனா நோய் தடுப்பு மருத்துவ முகாம்களுக்கான நடமாடும் வாகனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஊட்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி நடமாடும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் கொரோனா பாதிப்பு கிளஸ்டர் ஆக உருவானதால் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் காணொலி காட்சி மூலம் தலைமைச்செயலாளர் நடத்திய ஆய்வு கூட்டத்தில் அறிகுறிகள் இருப்பவர்களை கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

அதன்படி, நீலகிரி மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு மருத்துவ முகாம்கள் இன்று (அதாவது நேற்று) முதல் நடத்தப்படுகிறது. சளி, காய்ச்சல், தொண்டை வலி இருப்பவர்கள் மருத்துவ முகாம் மூலம் கண்டறியப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக பரிந்துரைக்கப்படுவார்கள். அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சளி மாதிரி எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

கிராமப்புறங்களுக்கு செல்லும் வகையில் நடமாடும் மருத்துவ வாகனங்கள் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மருத்துவ குழுவினர் கிராமங்கள் மற்றும் வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்கின்றனர். இந்த முகாம் வருகிற ஆகஸ்டு மாதம் முதல் வாரம் வரை நடக்கிறது. அனுமதி பெற்று நடத்தப்படும் திருமண நிகழ்ச்சியில் 50 பேருக்கு மேலும், துக்க நிகழ்ச்சியில் 20 பேருக்கு மேலும் கலந்து கொள்வதை கண்டறிய காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி துறையினர் கண்காணிப்பார்கள். மீறினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். 

தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை தொடர்பில் உள்ளவர்கள் என மொத்தம் 30 பேரிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்படுகிறது. நீலகிரியில் பாதிக்கப்பட்ட 90 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை. கொரோனா வைரஸ் சமூக பரவல் ஆகாமல் இருக்க கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. நீலகிரியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட மாட்டாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். 

இவ்வாறு அவர் கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, வட்டார மருத்துவ அலுவலர் முருகேசன் மற்றும் ஜெயின் சங்க செயலாளர் ஹீராலால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News