செய்திகள்
மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் சரிபார்ப்பு பணி நடப்பதை காணலாம்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்தான நிலையில் மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் சரிபார்ப்பு

Published On 2020-07-09 06:22 GMT   |   Update On 2020-07-09 06:22 GMT
புதுவையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்தான நிலையில் மாணவ-மாணவிகளின் மதிப்பெண் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:

கொரோனா தொற்று பரவல் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதேபோல் பிளஸ்-1 தேர்வில் ஒரு பாடத்துக்கு மட்டும் தேர்வு நடைபெறாமல் இருந்தது. இந்தத் தேர்வுகளை நடத்த அரசு முயற்சி எடுத்த நிலையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே அவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகை பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி புதுவை மற்றும் காரைக்காலில் 236 பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகளின் மதிப்பெண் மற்றும் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள் புதுவை கல்வித் துறையால் சேகரிக்கப்பட்டது.

அதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதாத 13,597 மாணவ-மாணவிகள் மற்றும் பிளஸ்-1 படித்த 12,644 மாணவ-மாணவிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் இந்த மாணவ, மாணவிகளின் மதிப்பெண் மற்றும் விடைத்தாள் வருகைப் பதிவேட்டு விவரங்களை 100 பேர் கொண்ட ஆசிரியர் குழு சரி பார்த்தது.

இதன்படி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு தலைமையில் இணை இயக்குனர் குப்புசாமி, சிறப்பு பணி அதிகாரி நடன சபாபதி மற்றும் துணை முதல்வர் ஆல்பர்ட் டொமினிக் ராயன், தலைமையாசிரியர் அச்சுதன் மற்றும் ஆசிரியர்களை கொண்ட குழுவினர் இந்த பட்டியலை தயார் செய்துள்ளனர்.

இந்த பட்டியல் சென்னை பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து மதிப்பெண்கள் விவரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.
Tags:    

Similar News