செய்திகள்
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை- சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

Published On 2020-07-02 07:31 GMT   |   Update On 2020-07-02 07:31 GMT
புதுச்சேரியில் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
புதுச்சேரி:

டாக்டர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அரசு மருத்துவமனை, எல்லைபிள்ளைச்சாவடியில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றுக்கு நேரில் சென்று அங்கு பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது அவர்கள் மத்தியில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேசியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் இந்த காலத்தில் மருத்துவ பணியாளர்கள் இடையறாது உழைக் கின்றனர். அவர்களால் தங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் இருக்க முடியவில்லை. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின்பு அவர்களின் வேலைப்பளு அதிகரித்துள்ளது.

நமது மாநிலத்தில் 70 சதவீதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளது. பிற துறையினர் குறிப்பிட்ட நேரம் பணி புரிந்து விட்டு வீட்டுக்குச்சென்று விடுவார்கள். ஆனால் சுகாதாரப் பணியாளர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் பணி செய்து வருகிறார்கள்.

சிறப்பாக பணியாற்றியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளிவரும். தொடர்ந்து உங்களது ஒத்துழைப்பு தேவை. புதுவையை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற மருத்துவ வசதியில்லை. எதிர்காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும் நம்மால் தாக்குப்பிடிக்க முடியும். நமது மாநிலத்தில் நிறைய தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News