செய்திகள்
புதுவை கடற்கரை

கொரோனா பாதிப்பை தடுக்க அதிரடி- புதுவையில் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது

Published On 2020-06-24 13:05 IST   |   Update On 2020-06-24 13:05:00 IST
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புதுவையில் நேற்று முதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இதனால் கடற்கரை மூடப்பட்டது. மதியம் 2 மணிக்கு மேல் கடைகள், பெட்ரோல் பங்குகள் அடைக்கப்பட்டன.
புதுச்சேரி:

உலகையே மிரட்டிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கத்துக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையொட்டி அறிவிக்கப்பட்ட தளர்வுகளை வாபஸ் பெற்று பல மாநில அரசுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

அந்த வகையில் புதுவை மாநிலத்திலும் கடற்கரை, வழிபாட்டுத்தலங்கள், பெட்ரோல் பங்குகள், கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகம் போன்றவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் சென்னையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாலும், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

இதன்பின் பெட்ரோல் பங்குகள், கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகம், மதுக்கடைகள் போன்றவை காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே திறந்து இருக்க வேண்டும். கடற்கரை மூடப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அரசால் அறிவிக்கப்பட்டன. 10 நாட்களுக்கு இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று காலை முதல் அதிரடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அதன்படி பெரிய மார்க்கெட்டில் இயங்கி வந்த காய்கறி கடைகள் மீண்டும் புதிய பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டன. நேரு வீதி, காந்தி வீதி, அண்ணாசாலை, புஸ்சி வீதி, மறைமலை அடிகள் சாலை, கடலூர் சாலை உள்ளிட்ட நகர் முழுவதும் உள்ள கடைகள், பெட்ரோல் பங்குகள், மதுக்கடைகள், மார்க்கெட்டுகள் ஆகியவை மதியம் 2 மணி வரை செயல்பட்டன. அதன்பிறகு 3 மணி வரை கடைகளில் வேலைபார்க்கும் ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். அதன்பின் அவை முழுமையாக மூடப்பட்டன. நடைபயிற்சி மேற்கொள்வதற்காக கடற்கரை சாலைக்கு ஒரு சிலர் வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை திருப்பி அனுப்பினர். பொழுது போக்குவதற்காக பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு மதியம் 2 மணிக்கு மேல் வந்தவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

இதனால் எப்போதும் பரபரப்பாக இயங்கி வந்த கடற்கரை, மார்க்கெட்டுகள், கடை வீதிகள், பூங்காக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பால் பூத்துகள் மாலை 6 மணி வரை செயல்பட்டன. எந்த தடையும் இல்லாததால் மருந்துக்கடைகள் வழக்கம் போல் இயங்கின.

நகரின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றி வந்தவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.

மதியம் 2 மணிக்கு மேல் நகர் முழுவதும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கடைகளை திறந்து வைத்து இருந்த ஒரு சிலரை உடனே மூடுமாறு எச்சரித்தனர். மதியம் 3 மணிக்கு மேல் நகர் முழுவதும் தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

அரியாங்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், தவளக்குப்பம், திருக்கனூர், வில்லியனூர், திருபுவனை ஆகிய பகுதிகளிலும் நேற்று மதியம் 2 மணிக்கு மேல் மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள், மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன.

Similar News