செய்திகள்
கொரோனா வைரஸ்

புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று- புதுவையில் கொரோனாவால் முதியவர் பலி

Published On 2020-06-22 17:34 IST   |   Update On 2020-06-22 17:34:00 IST
புதுவையில் புதிதாக 25 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. கொரோனாவால் நேற்று 64 வயது முதியவர் பலியானார். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
புதுச்சேரி:

புதுவையில் நேற்று 255 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 25 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் 12 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 13 பேர் ஜிப்மரிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவார்கள்.

கிருமாம்பாக்கத்தை அடுத்த மதிகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 64 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் புதுவையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை கொரோனாவிற்கு மொத்தம் 366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் 159 பேர், ஜிப்மரில் 50 பேர், காரைக்காலில் 8 பேர், ஏனாமில் ஒருவர் என 218 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 140 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் கதிர்காமம் மருத்துவக்கல்லூரியில் 8 பேர், ஜிப்மரில் ஒருவர் என 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 12,409 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 11,866 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. 190 பரிசோதனைகளுக்கு முடிவு வரவேண்டியுள்ளது.

இதுகுறித்து புதுவை மாநில சுகாதார துறை இயக்குனர் மோகன்குமார் கூறுகையில், தொடக்கத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது 3 இலக்கத்துக்கு உயர்ந்துள்ளது. சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோரால் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. புதிதாக ஊருக்குள் வருபவர்கள் பற்றி தெரியவந்தால் உடனே அரசுக்கு பொதுமக்கள் தெரியப்படுத்த வேண்டும். வயது வித்தியாசமின்றி கொரோனா தாக்கி வருகிறது. வயதானவர்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும் என்று யாரும் கருத வேண்டாம். எனவே பொதுமக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

Similar News