செய்திகள்
போராட்டம்

திருச்சியில் இருந்து வந்த பெண்ணை திரும்ப அனுப்பக்கோரி பொதுமக்கள் போராட்டம்

Published On 2020-05-20 10:16 IST   |   Update On 2020-05-20 10:16:00 IST
கோத்தகிரி அருகே திருச்சியில் இருந்து வந்த பெண்ணை திரும்ப அனுப்பக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஹாவுக்கல் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட் குடியிருப்பில் தங்கி பணிபுரிந்து வந்த பெண் ஒருவர், தனது மகளின் பிரசவத்துக்காக திருச்சி அருகே உள்ள சிறுகனூருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்றார். அவர் இ-பாஸ் பெற்று விட்டு, அங்கிருந்து கோத்தகிரி ஹாவுக்கல் பகுதிக்கு நேற்று அதிகாலை வந்தார். ஆனால் அந்த பெண்ணை எஸ்டேட் நிர்வாகம் குடியிருப்பில் தங்க அனுமதிக்கவில்லை.

இதனால் எங்கு சென்று தங்குவது என தெரியாமல் அவர் குழப்பம் அடைந்தார். இதற்கிடையில் அவரது குடும்ப நண்பர் ஒருவர், தனக்கு சொந்தமான வீடு கோத்தகிரி காம்பாய் கடை பகுதியில் உள்ள காளவாய் என்ற இடத்தில் காலியாக உள்ளதாகவும், அந்த வீட்டில் தங்கி கொள்ளுமாறும் கூறினார். இதையடுத்து அந்த பெண், நேற்று காலை 11 மணியளவில் அந்த வீட்டில் தங்குவதற்காக காளவாய் பகுதிக்கு வந்தார். இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து, அந்த வீட்டை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு, அந்த பெண்ணை திரும்ப அனுப்பக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

இல்லையென்றால் அவர் ஹாவுக்கல் பகுதியிலோ அல்லது அரசு தனிமைப்படுத்துதல் மையத்திலோ தன்னை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி தாசில்தார் மோகனா மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம், இ-பாஸ்சில் குறிப்பிட்டு உள்ள முகவரிக்கே அந்த பெண்ணை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதனை தொடர்ந்து திருச்சியில் இருந்து வந்த அந்த பெண்ணை மீண்டும் ஹாவுக்கல் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட் குடியிருப்புக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அங்கு சென்று அவர் தன்னை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News