செய்திகள்
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள இத்தாலியன் பூங்கா வெறிச்சோடி உள்ள காட்சி.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி ரத்து

Published On 2020-05-15 03:55 GMT   |   Update On 2020-05-15 03:55 GMT
ஊரடங்கு உத்தரவால் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறும். இதையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். ஊட்டி மலர் கண்காட்சி சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. இதனை காண உள்நாடுகள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள். நடப்பாண்டில் 124-வது மலர் கண்காட்சி இன்று(வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 19-ந் தேதி வரை 5 நாட்கள் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதற்காக ஜப்பான், நெதர்லாந்து, அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய வெளிநாடுகளில் இருந்து 50 வகையான செடிகளில் இருந்து 400 ரக விதைகள் பெறப்பட்டு நர்சரியில் வளர்க்கப்பட்டன. பின்னர் நடைபாதை ஓரங்கள், மலர் பாத்திகள் மற்றும் மரங்களை சுற்றிலும் 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டது. இந்த செடிகளில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்குவதால் பூங்காவே வண்ணமயமாக காட்சி அளிக்கிறது.

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் வரவில்லை. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு இருக்கிறது. ஊரடங்கால் ஊட்டியில் 124-வது மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் ஊரடங்கு உத்தரவால் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, ஊட்டியில் ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி ஆகிய 3 கண்காட்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு தேயிலை விலை வீழ்ச்சியையொட்டி சிறு தேயிலை விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை. அதற்கு பிறகு தற்போதுதான் மலர் கண்காட்சி ரத்து செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News