செய்திகள்
உயிரிழந்தவர்கள்.

போதைக்காக வார்னிஷ் குடித்த 3 பேர் உயிரிழப்பு

Published On 2020-04-06 05:14 GMT   |   Update On 2020-04-06 05:14 GMT
செங்கல்பட்டில் போதைக்காக வார்னிஷ் குடித்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு ரெயில்வே குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் பிரதீப்(வயது 32), சிவசங்கரன்(35) மற்றும் சிவராமன்(31). இவர்களில் சென்னை போரூரைச் சேர்ந்தவரான பிரதீப், சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட பாரேரியைச் சேர்ந்தவரான சிவசங்கரன் இருவரும் செங்கல்பட்டு அடுத்த ஒத்திவாக்கத்தில் ரெயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வந்தனர். சிவராமன் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். நண்பர்களான இவர்கள் 3 பேரும் போதைக்கு அடிமையானவர்கள் என்று கூறப்படுகிறது.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இதனால் இவர்கள் 3 பேரும் மதுகுடிக்க முடியாமல் பரிதவித்தனர்.

நேற்று முன்தினம் நண்பர்கள் 3 பேரும் ஒன்று சேர்ந்து போதைக்காக பெயிண்டில் கலக்க பயன்படுத்தப்படும் வார்ஷினில் எலுமிச்சை பழம் சாறை கலந்து குடித்தனர். சிறிதுநேரத்தில் 3 பேரும் கடுமையான வயிற்று வலியால் துடிதுடித்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரெயில்வே ஊழியர்களான பிரதீப் நேற்று முன்தினம் இரவும், சிவசங்கரன் நேற்று அதிகாலையிலும் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனை செய்யாமலேயே இவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து மயக்க நிலையில் இருந்த சிவராமனிடம் டாக்டர்கள் விசாரித்தனர். அதில் அவர், 3 பேரும் போதைக்காக வார்னிஷில் எலுமிச்சை பழம் சாறை கலந்து குடித்ததாக தெரிவித்தார். அதன்பிறகு அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த செங்கல்பட்டு டவுன் போலீசார், சிவராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போதைக்காக வார்ஷினில் எலுமிச்சை பழம் சாறு கலந்து குடித்த ரெயில்வே ஊழியர்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News